லாரியின் ஜி.பி.ஆர்.எஸ் கருவியை பிடுங்கி, 29 டன் ஸ்டீல் காயில் திருட்டு; பாஜக பிரமுகர் உட்பட, நால்வர் கும்பல் கைது

கர்நாடகாவில் இருந்த வந்த லாரியின், ஜி.பி.ஆர்.எஸ் கருவியை பிடுங்கி எறிந்து 29 டன் ஸ்டீல் காயில்களை திருடி, 12 லட்சம் ரூபாய்க்கு விற்ற வழக்கில், பாஜக பிரமுகர் உட்பட நால்வர் கும்பலை கைது செய்தனர்.

கர்நாடகாவில் இருந்து, 29 டன் ஸ்டீல் காயில்களை ஏற்றிக்கொண்டு மணலி பகுதிக்கு, லாரி ஒன்று வந்தது.

அந்த லாரியில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ் கருவி வேலை செய்யவில்லை. இதனால், அந்த லாரி எங்கு உள்ளது என தெரியாமல், அதன் உரிமையாளர் ரவிக்குமார் என்பவர், மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து , போலீசார், விசாரணையில் இறங்கியபோது, லாரியின் ஜி.பி.ஆர்.எஸ் கருவி காட்டூர் பகுதி வரை செயல்பட்டது தெரியவந்தது.

அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை வைத்து, லாரியை கண்டுபிடித்தனர். அது, அங்குள்ள ஒரு குடோனில் பதுக்கியிருந்தது தெரியவந்தது.

அதில் இருந்த ஸ்டீல் காயில்களை, 12 லட்சத்திற்கு விலை பேசி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

 போலீசார், இது தொடர்பாக, நால்வரை கைது செய்தனர். விசாரணையில் திருவேற்காடு, தேவி நகர், 5வது தெருவை சேர்ந்தவர் பாரதிராஜா(43).

இவர், பாரதிய ஜனதா கட்சியின், திருவள்ளூவர் மேற்கு மாநில செயற்குழு உறுப்பினர்.

செங்குன்றம், பாடிய நல்லூரை சேர்ந்த சுரேஷ்குமார்(36), புது நகர், 5து தெருவை சேர்ந்த பிச்சாண்டி(எ) மணிகண்டன்(37), எம்.ஏ நகரை சேர்ந்த சந்தோஷ்(34) ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், லாரி டிரைவர் செல்வம் மூலம் பாரதிராஜா, லாரியை கடத்தி, ஸ்டீல் காயில்களை திருடி, விற்றது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த செல்வத்தை தேடி வருகின்றனர்.