அதானி குழுமத்தின் 5 பங்குகள் வீழ்ச்சியால் எல்ஐசி-க்கு ரூ.16,500 கோடி இழப்பு

அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட சரிவால் அதில் முதலீடு செய்துள்ள பலநிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

குறிப்பாக எல்ஐசி நிறுவனத்துக்கு 2 நாட்களில் அதானி குழும பங்குகள் மதிப்பு சரிவால் ரூ.16,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த புதன்கிழமை அதானி குழுமத்தைப் பற்றிய அறிக்கை வெளியிட்டது.

கடந்த 2 ஆண்டுகளாகஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில் “அதானி குழுமம் கடந்த 10 ஆண்டுகளில் பங்குச்சந்தையில் ஏராளமான மோசடியில் ஈடுபட்டுள்ளது.

பங்குகளின் மதிப்பை அதிகப்படுத்திக்காட்ட, வரவு செலவுக் கணக்கை போலியாகத் தயாரித்தல், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி பணப்பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை செய்துள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தது.

இதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்புகடந்த 2 நாட்களில் மட்டும் 20 சதவீதம் வரை சரிந்தன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துவிட்டது.

ஹிண்டன்பர்க்க நிறுவனத்துக்கு எதிராக இந்தியா அமெரிக்காவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது

அதானி குழுமத்தின் பங்குகளில் அதிகமாக முதலீடு செய்த நிறுவனங்களில் முக்கியமானது எல்ஐசி நிறுவனமாகும்.

அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த 2 நாட்களில் பெரிய சரிவைச் சந்தித்து, மதிப்பு வீழ்ந்ததால், எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.16,580 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானியின் டோட்டல் கேஸ் நிறுவனத்தில் 5.96 சதவீதம் பங்குகளை எல்ஐசி நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததால், எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.6,232 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

எல்ஐசி நிறுவனம், அதானி குழுமத்தின் 5 முக்கிய நிறுவனங்களில அதிக அளவு பங்குகளை வைத்துள்ளது. அந்த நிறுவனங்களின் பங்குகள் சரிந்ததால், எல்ஐசிக்கு ஏற்பட்ட இழப்பைப் பார்க்கலாம்.
அதானி என்டர்பிரைசர்ஸ்

அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனம் 4.81 கோடிபங்குகள் அதாவது 4.23 சதவீத பங்குகளை வைத்துள்ளது. கடந்த இரு நாட்களா அதானி என்டர்பிரைசர்ஸ் பங்குகள் வீழ்ந்தன.

அதாவது அதானி என்டர்பிரைசர்ஸ் பங்கு ரூ.3442 லிருந்து ரூ.2,768.50க்கு வீழ்ச்சி அடைந்தது.அதாவது ஒரு பங்கிற்கு ரூ.673.50 இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் எல்ஐசி நிறுவனத்துக்கு 2 நாட்களில் மட்டும் ரூ.3,245 கோடி( ₹673.50 x 4,81,74,654) இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி போர்ட்ஸ்:
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனத்துக்கு 19.75 பங்குகள் அதாவது 9.14% உள்ளன. இரு நாட்களில் அதானி போர்ட் பங்குகள் ரூ.761.20 லிரிருந்து ரூ.604.50 என சரிந்தன.

அதாவது ஒரு பங்கிற்கு ரூ.156.70 குறைந்துவிட்டது. இதனால் எல்ஐசி நிறுவனத்துக்கு 2 நாட்களில் மட்டும் ரூ.3,095 கோடி(156.70 x 19,75,26,194) இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி டிரான்ஸ்மிஷன்:
அதானி டிரான்ஸ்மிஷனில் எல்ஐசி நிறுவனம் 3.65 சதவீதப் பங்குகள் அதாவது 4.06 கோடி பங்குகள் வைத்துள்ளது.

கடந்த 2 நாட்களில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.2,762.15லிருந்து, ரூ.2,014.20ஆகச் சரிந்தது. அதாவது ஒரு பங்கிற்கு ரூ.747.95 எனக் குறைந்தது. இதன் மூலம் எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.3,042 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி கிரீன்:
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனத்துக்கு 1.28% அல்லது 2.03 கோடி பங்குகள் உள்ளன.

அதானி கிரீன் நிறுவனப் பங்கு கடந்த இரு நாட்களில் ஒரு பங்கிற்கு ரூ.430.55 குறைந்துவிட்டது. இதனால் எல்ஐசி நிறுவனத்துக்கு 2 நாட்களில் மட்டும் ரூ.875 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி டோட்டல் கேஸ்:
அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தில் எல்ஐசி 5.96% பங்குகளை, 6.55 கோடி பங்குகள் வைத்துள்ளது.

இரு நாட்களில் அதானி டோட்டல் கேஸ் பங்கு மதிப்பு கடந்த 2 நாட்களில் ஒரு பங்கிற்கு ரூ.963.75 இழப்பு ஏற்பட்டது. இதன் மூலம் எல்ஐசி நிறுவனத்துக்கு 2 நாட்களில் ரூ.6,323 கோடி இழ்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக கடந்த 2 நாட்களில் எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.16,580 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.