எல்ஐசி ஐபிஓ வரலாற்று சாதனை: இதுவரை இல்லாத தொகை: ஒரு பங்குவிலை எவ்வளவு தெரியுமா?

எல்ஐசி ஐபிஓ விற்பனை மூலம் மத்திய அரசு எதிர்பார்க்காத வகையில் ரூ.20ஆயிரத்து 560 கோடி கிடைத்துள்ளது. இந்தியப் பங்குச்சந்தையில் இதுவரை நடந்த ஐபிஓவில் இவ்வளவு பெரிய முதலீடு குவிந்தது இல்லை.

உள்நாட்டு முதலீட்டாளர்களின் ஏகோபித்த ஆதரவு, பாலிசிதாரர்கள், ஊழியர்களின் ஆர்வம், கடைசி நேரத்தில் குவிந்த அந்நிய முதலீடு ஆகியவற்றால் 270 கோடி டாலர் முதலீடு குவிந்துள்ளது.

எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபியிடம் நேற்று மாலை தாக்கல் செய்த அறிக்கையின்படி எல்ஐசி ஒரு பங்கின் விலை ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு பங்கு ரூ.902 முதல் 949க்கு விற்கப்பட்டது.

வாங்குவோரின் ஆர்வம், விண்ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பங்கு ரூ.949ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் ட்டியலிடப்படும் எனத் தெரிகிறது.

2019ம் ஆண்டு சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் 29.40 பில்லியன் மதிப்பில் லிஸ்டிங் செய்யப்பட்டதே உலகளவில் மிகப்பெரியதாகும்.

அதைப்போலவே எல்ஐசி நிறுவனமும் பங்குச்சந்தையில் லிஸ்டிங் செய்யப்பட உள்ளது. கடைசி நேரத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதால், இந்த அளவு முதலீடு குவிந்தது.

எல்ஐசி பங்குகள் கிரே மார்க்கெட்டில் பங்கு வெளியீட்டு முதல் நாளில் ரூ.100 முதல் 105 ரூபாய் வித்தியாசத்தில் விற்கப்பட்டது.

ஆனால், திடீரென 80 சதவீதம் குறைந்த பங்குகளை வாங்க விண்ணப்பித்தவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால், சந்தையில் லிஸ்டிங் செய்யப்பட்டபின் முதலீட்டாளர்கள் லாபத்தை பார்ப்பார்கள் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

எல்ஐசி நிறுவனத்தின் 16 கோடியே 20 லட்சத்து 78 ஆயிரத்து 67 பங்குகளை வாங்குவதற்கு 47 கோடியே, 83 லட்சத்து67ஆயிரத்து 10 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட 6 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள், எல்ஐசி ஊழியர்கள் தரப்பில் விருப்ப விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 4.4 மடங்கு கூடுதலாக வந்தன.

தனிநபர்கள் பிரிவில் அதாவது சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட அளவைவிட 2 மடங்கு, ஏறக்குறைய ரூ.12 ஆயிரத்து 450 கோடிக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்தன.

பொது முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனையில் எல்ஐசி ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும் தரப்பட்டது. பங்குகளை வாங்க தரப்பட்ட தள்ளுபடிதான் ஆர்வத்தை தூண்டி முதலீட்டை ஈர்த்தது.

மத்திய அரசு ரூ.21 ஆயிரம் கோடியை எதிர்பார்த்தாலும், சர்வதேச சூழல், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீத உயர்வு, ரஷ்யா உக்ரைன் போர் ஆகியவற்றால் பங்குகள் விற்பனையாகுமா என்று சந்தேகம் எழுந்தது.

ஏனென்றால் அந்நிய முதலீட்டாளர்கள் தரப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை, கடைசி நாளில் சிலமணிநேரங்களில்தான் முதலீடு வந்தது. இந்த ரூ.20,500 கோடி நிச்சயம் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை சரிசெய்ய உதவும்.