போலீஸ் குடியிருப்பில் கைவரிசை: நகை – பணத்தை அள்ளிச்சென்றனர்; கொள்ளையர்கள் அட்டகாசம்..!

கோவை காவலர் குடியிருப்பில், கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து, போலீசாரின் இரண்டு வீடுகளில் கைவரிசை காட்டி, நகை-பணத்தை அள்ளி சென்றனர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் நவீனா. இவர், கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீசாக உள்ளார். இவர்,கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாக குடியிருப்பில் வசிக்கிறார்.

கடந்த 22ம் தேதி அன்று, வீட்டைப்பூட்டிக்கொண்டு, கிருஷ்ணகிரிக்கு சென்றார். இன்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு பவுன் மோதிரம். லேப் டாப் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே குடியிருப்பில் வசிப்பவர் மணிகண்டன். இவர் நக்சலைட் பிரிவில் போலீசாக உள்ளார்.

இவர் வீட்டை பூட்டிக்கொண்டு, அத்திக்கடவு பயிற்சி மையத்திற்கு சென்றார். கொள்ளையர்கள், இவரின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 3.5 சவரன் தங்க செயின், அரை சவரன் மோதிரம். வெள்ளிப்பொருட்கள் ஆகியவை எடுத்து சென்றனர்.
போலீஸ் குடியிருப்பில், இது மூன்றாவது கொள்ளை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.