கோலி நல்லாத்தான் பேட்செய்றாரு ஆனால் சீக்கிரம் அவுட் ஆகிறார்ராரு: வேதனைப் பட்ட மைக் ஹெசன்

விராட் கோலி நன்றாகத்தான் பேட் செய்கிறார், வலைப்பயிற்சியில் கடுமையாக உழைக்கிறார் ஆனால், விரைவாக ஆட்டமிழந்து, எல்லோரையும்போல் விரக்தி அடைந்துவிடுகிறார் என்று ஆர்சிபி அணி இயக்குநர் மைக் ஹெசன் வேதனை தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்தது.

210 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 54 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த சீசன் ஆர்பிசி வீரர் விராட் கோலிக்கு முள்மீது நடப்பதைப் போல் அமைந்துவிட்டது. இதுவரை எந்த போட்டியிலும் பெரிதாக இன்னிங்ஸ் ஏதும் ஆடவில்லை.

இந்த ஆட்டத்தில்கூட சிறப்பாகத் தொடங்கிய விராட் கோலி 20 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தா். ரபாடா வீசிய 4-வது ஓவரில் இடுப்புஉயரத்துக்கு எழுபிய பந்தை அடிக்க முற்பட்டு கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கோலி ஆட்டமிழந்து செல்லும்போது, இரு கைகளையும் மேலே உயர்த்தி, அடக்கடவுளே என்ன ஏன் இப்படி சோதிக்கிறாய் என்று கேட்டுக்கொண்டு மிகுந்த வேதனையிலும் அதிருப்தியிலும் வெளியேறினார். இதைப் பார்த்த அவரின் ரசிகர்கள் மிகுந்த துயரப்பட்டனர்.

இந்தப் போட்டிக்குப்பின் ஆர்சிபி அணியின் இயக்குநர் மைக் ஹெசன் அளித்த பேட்டியில் கோலி குறித்துக் கூறியதாவது:
நாங்கள் எங்கள் அணி வீரர்கள் அனைவரையும் பற்றி பேசுகிறோம்.

விராட் கோலி வலைப்பயிற்சியில் அருமையாக பேட் செய்ததால் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவார் என நினைத்தேன். இன்றைய நாள் கோலியின் நாளாக அமையும் என்று நினைத்தேன்.

ஆனால் மீண்டும் கோலியின் தொடைப்பகுதி பேடில் பந்துபட்டு கேட்சாக மாறியிருக்கிறது. கோலிக்கு நேரம் சரியில்லை. குறிப்பாக ஆட்டமிழக்கும்போது எல்லோரையும் போல் அவரும் விரக்தி அடைந்துவிடுகிறார்.

ஆர்சிபி அணியில் விராட் கோலி சிறந்த வீரர், தேடினாலும் கிடைக்காத வீரர். இந்த சீசனில் அவர் ரன் அடிக்கவில்லைதான்.

ஆனால் வலைப்பயிற்சியில் தோனி மிகக் கடுமையாக பயிற்சி செய்தததைப்பார்த்தேன். ஆனால், துரதிருஷ்டம் அவரைத் துரத்துகிறது.

விரைவில் சிறப்பான இன்னிங்ஸை கோலியிடம் பார்ப்போம்.
இவ்வாறு ஹெசன் தெரிவித்தார்.