வாரி வழங்கும் வள்ளல் ஹேசல்வுட்… வாட்ஸன் சாதனையையே முறியடிச்சுட்டிங்களே!

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி பந்துவீச்சாளரும், ஆஸ்திரேலிய வீரருமான ஜோஸ் ஹேசல்வுட் தேவையில்லாத சாதனையைச் செய்துள்ளார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்தது.

210 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 54 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் ஹேசல்வுடன் 4 ஓவர்கள் வீசி 64 ரன்கள் வாரி வழங்கினார். ஹேசல்வுட் வீசிய 4 ஓவர்களில் 7பவுண்டரி, 4 சிக்ஸர்கள் விளாசப்பட்டன.

லிவிங்ஸ்டோன், பேர்ஸ்டோ இருவரும் சேர்ந்து ஹேசல்வுட் பந்துவீச்சை நொறுக்கி அள்ளினர். ஹேசல்வுட் தான் வீசிய முதல் ஓவரில் 22 ரன்களும், 4-வது ஓவரில் 24 ரன்களும் வாரி வழங்கினார்.

5 டாட் பந்துகள் மட்டுமே வீசியுள்ளார். ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக மாறிய ஹேசல்வுட் ஐபிஎல் தொடரில் வேண்டாத சாதனைச் செய்துள்ளார்.

இதன் மூலம் இந்த ஐபிஎல் சீசனில் மிகமோசமான பந்துவீச்சாளர், அதாவது ரன்களை வாரி வழங்கிய பந்துவிச்சாளர் என்ற பெருமை ஹேசல்வுட்டுக்கு கிடைத்துள்ளது.

இதற்கு முன் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர் மார்கோ ஜான்ஸன் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து அந்தப்பட்டத்தை வைத்திருந்தார் அவரிடம் இருந்து ஹேசல்வுட் பெருந்தன்மையுடன் பெற்றுக்கொண்டார்.

ஆர்சிபி பந்துவீச்சாளர்களில் வாரி வழங்கும் வள்ளல் ப ந்துவீச்சாளர் எனப் பெயரெடுத்தது ஷேன் வாட்ஸன்தான்.

2016ம் ஆண்டு ஐபிஎல் பைனலில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பந்துவீசி ஷேன் வாட்ஸன் 61 ரன்கள் வழங்கியதே இன்றுவரை எந்த ஆர்சிபி வீரரின் மோசமான பந்துவீச்சாக இருந்தது.

ஆனால், அதை ஹேசல்வுட் முறியடித்துள்ளார். இதில் என்ன ஒற்றுமையென்றால் ஷேன் வாட்ஸன், ஹேசல்வுட் இருவருமே ஆஸ்திரேலிய வீரர்கள்தான்.