இங்கி.சமாளிக்குமா? 2-வது டெஸ்டில் ஆர்ச்சரும், ஆன்டர்ஸனும் இல்லையா?

ஜோப்ரா ஆர்ச்சர்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது.

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து, அவர் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆர்ச்சர் இல்லாத நிலையில் இங்கிலாந்து அணிக்கு இது பின்னடைவுதான்.

இங்கிலாந்து அணி

ஜோப்ரா ஆர்ச்சர் நாளை டெஸ்ட் போட்டியில் களமிறங்காத நிலையில், அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் களமிறங்குவார்.

இதற்கிடைய இங்கிலாந்து அணி நிர்வாகம் சுழற்ச்சி முறையில் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒரு போட்டியில் பந்துவீசிய வீரர் அடுத்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்படும். இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் ஆன்டர்ஸனுக்கு ஒரு போட்டியிலும், ஸ்டூவர்ட் பிராட்டுக்கு ஒரு போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனால், ஆன்டர்ஸனுக்கு 2-வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம் என்ற தகவல் எழுந்துள்ளது. ஆனால், தற்போது ஆர்ச்சர் இல்லாத நிலையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுமா என்பது கடைசி நேரத்தில் தான் தெரியவரும்.