கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்: 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் கண்ட ஜோ ரூட்: ஐசிசி பாராட்டு

இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில் ரூட்

100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் என்று பாராட்டுத் தெரிவித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4-போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல்இரு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்றுத் தொடங்கியது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்திருந்தது இங்கிலாந்து அணி. ரூட் 128ரன்களுடன் இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பென்ஸ்டோக்ஸுடன் ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை வெறுப்படைய வைக்கும் வகையில் பேட் செய்தனர். இருவரையும் ஆட்டமிழக்க வைக்க கேப்டன் கோலி பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை.

அபாரமாக ஆடிய ரூட் 260 பந்துகளில் 150 ரன்களையும், 341 பந்துகளில் 200 ரன்களையும் எட்டினார். அஸ்வின் பந்துவீச்சில் அபாரமாக சிக்ஸர் அடித்து 200 ரன்களை ரூட் அடைந்தார். 218 ரன்கள்(377பந்துகள் 19பவுண்டரி, 2சிக்ஸர்) சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸுடன் இன்று காலை ஆட்டத்தைத் தொடங்கிய ரூட், 124 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தார், 5-வது விக்கெட்டுக்கு ஒலே போப்புடன் பார்னர்ஷிப் அமைத்து 86 ரன்கள் சேர்த்தால் ரூட். ஸ்டோக்ஸ் 82 ரன்னிலும், போப் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த ரூட்டுக்கு ஐசிசி பாராட்டுத் தெரிவித்துள்ளது. ஐசிசி சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில் “ டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஜோ ரூட். இங்கிலாந்து கேப்டனிடம் இருந்து அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டது” எனப் பாராட்டியுள்ளது.

இதற்கு முன் இந்தியாவில் தனது 100-வது டெஸ்டில் சதம் அடித்த பெருமை பாகிஸ்தானின் இன்சமாம் உல்ஹக்கு சேரும். கடந்த 2005-ம் ஆண்டில் பெங்களூருவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்சமாம் தனது 100-வது டெஸ்டில் 184 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி 473 ரன்கள்வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் அதன்பின் விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த 53 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது. அஸ்வின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி போப்(34) ஆட்டமிழந்தார். நதீம் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ரூட் ஆட்டமிழந்தார். இசாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ஆர்ச்சர், பட்லர் போல்டாகி வெளியேறினர். 55 ரன்களுக்குள் போப்(34), ரூட்(218)பட்லர்(30), ஆர்ச்சர்(0) ஆகியோர் வி்க்கெட்டுகள் மடமடவென சரிந்தது. டாம்

பெஸ் 18 ரன்னிலும், லீச் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.180 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555ரன்கள் சேர்த்துள்ளது

.