ஜியோவின் புத்தாண்டு சலுகை: இனி அனைத்து நெட்வர்க் கால்களுக்கும் கட்டணம் இல்லை

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சலுகையாக ஜனவரி 1 முதல் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கும் உள்நாட்டு வாய்ஸ் கால் இலவசம் என அறிவித்துள்ளது.

ஜியோ செல்போன் நிறுவனம் தனது தங்குதடையற்ற இண்டெர்நெட் மற்றும் தெளிவான டவர் வசதி காரணமாக அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ தவிர மற்ற நெட்வர்க் உள்ள எண்களுக்கு போன் செய்தால் நிமிடத்திற்கு 6 பைசா வசூல் செய்யப்பட்டது.


ஏற்கெனவே அனைத்துக் கால்களுக்கும் கட்டணமில்லை என்கிற நிலையில் சில மாதங்களுக்கு முன் இந்த சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அறிவுறுத்தலின் படி, ஜனவரி 1 முதல் அனைத்து உள்நாட்டு வாய்ஸ் கால்களுக்கும் இலவச அழைப்பு வசதியை அளிப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆஃப்-நெட் உள்நாட்டு குரல் அழைப்பு கட்டணங்களை பூஜ்ஜியமாக மாற்றி, ஐயூசி கட்டணங்கள் ரத்து செய்து ஜியோ மீண்டும் 2021 ஜனவரி 1 முதல் அனைத்து வாய்ஸ் கால்களையும் இலவசமாக்கும்” என்று தெரிவித்துள்ளது.

இதனால், ஏர்டெல், விஐ (வோடாவோன் ஐடியா) நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறுவதற்கு வாய்ப்புள்ளதால் இது அந்நிறுவனங்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.