ஜெய்பீம் பட சர்ச்சை..!மன்னிப்பு அல்லது ரூ.5 கோடி இழப்பீடு..! சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்:

‘ஜெய் பீம்’ படத்தில் வன்னியர்களுக்கு எதிராக காட்சி அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட அவதூறை நீக்க காட்சிகளை நீக்கி ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு என நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதிர்வலை ஏற்படுத்திய ஜெய்பீம்
நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த ஜெய்பீம் படம் மிகப்பெரிய அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இருளர் இன மக்களுக்கு எதிராக போலீஸ் நடத்திய வன்முறை வெறியாட்டத்துக்கு எதிராக முன்னாள் நீதிபதி சந்துரு இலவசமாக வழக்காடி நியாயம் கிடைக்கச் செய்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் என்பதால் பெரும் வரவேற்பை உலகெங்கிலும் படம் பெற்றுள்ளது.

முதல்வர் முதல் அரசியல் கட்சித்தலைவர்கள் பாராட்டு

படத்தை பார்த்து அதிர்ந்துப்போனேன், 1976 ஆம் ஆண்டு மிசாக்கால கொடுமைகள் என் மனதில் நிழலாடியது என தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டியது படத்துக்கு மிகப்பெரிய பிளஸ்பாயிண்டாக அமைந்தது. தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் படத்தை பாராட்டியுள்ளனர்.

வன்னியருக்கு எதிராக காட்சி அமைப்பா?

படத்தில் வரும் கொடுமைக்கார எஸ்.ஐ குருமூர்த்தியை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவராக காட்சிப்படுத்தும் விதத்தில் அவரது வீட்டில் காலண்டர் காட்சி இருந்ததாக வன்னியர் சமூகத்தினர் சமூக வலைதளங்களில் கண்டனம் எழுப்பினர்.

நிஜ வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. அந்தோணிசாமி தலித் கிருத்துவர் என்று இருக்கும்போது வலுக்கட்டாயமாக இக்காட்சியை வன்னியருக்கு எதிராக வைக்கும் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

சூர்யாவுக்கு அன்புமணி கடிதம்-சூர்யா பதில்
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சூர்யாவும் பதிலுக்கு விளக்கம் அளித்திருந்தார். படத்தில் வரும் அக்காட்சியும் மாற்றப்பட்டது.

ஆனாலும் தொடர்ந்து இப்பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது, சூர்யாவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு என வடமாநில பாணியில் வன்னியர் சங்கத்தை சேர்ந்த சிலர் அறிவித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியர் சங்கம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்

இந்நிலையில் வன்னியர் சங்கம் சார்பில் ரூ 5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநில தலைவர் நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் மன்னிப்பு கோராவிட்டால் வழக்கு

வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என பு.த.அருள்மொழி நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.