ஜடேஜாவுக்கு பிடிச்ச எஸ்பிபி பாட்டு – அஸ்வின் சொன்ன புது தகவல்

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த வருடம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஜூன் 4-ம் தேதியன்று எஸ்பிபியின் 75-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பலரும் எஸ்பிபி குறித்த நினைவலைகளையும் அவரது பாடல்களையும் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான அஸ்வின் ரவிச்சந்திரன் தனது யூட்யூப் பக்கத்தில் வெளியிட்ட ஒரு காணொலியில் கூறியிருப்பதாவது:

பொதுவாக நான் உடற்பயிற்சி கூடத்தில் தமிழ் பாடல்கள் கேட்பது வழக்கம். சமீபத்தில் நான் ரவீந்திர ஜடேஜாவை ஜிம்மில் சந்திந்தேன். அப்போது அவர் என்னுடைய பாடல் தொகுப்பை கண்டார். பிறகு அவர் என்னிடம் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். பின்னர் ‘வானத்தைப் போல’ படம் குறித்தும் விசாரித்தார்.

இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.