சத்தமில்லாமல் காய் நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி.. தர்ம யுத்தத்துக்கு தயாராகும் ஓ.பி.எஸ்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருவதாகவும், இதனால் ஓ.பன்னீர் செல்வம் அதிருப்பதி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்ததால் அதிமுக ஆட்சியை இழந்தது. இருப்பினும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து அதிமுக கிடைத்தது. இதனையடுத்து சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் யார் என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் மோதல் ஏற்பட்டது. எடப்பாடிக்கு அதிக ஆதரவு இருந்ததால் பன்னீர் செல்வம் வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அதிமுகவின் சட்டப்பேரவை தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக தலைமை அலுவலகம்

தற்போது கட்சிக்குள் இரட்டை தலைமை இருப்பதால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை, கடைசி வரைக்கும் போராட வேண்டியதாக இருக்கிறது. அதனால் அதிமுகவை ஒற்றை தலைமைக்கு கொண்டு வர வேண்டும் என அதிமுகவினர் ஒரு தரப்பினர் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பழனிசாமிக்கு கவுண்டர்கள் முழுமையாக ஆதரவு உள்ளது. மேலும், வன்னியர்கள், தேவர்களின் ஆதரவு உள்ளதால் கட்சியை ஒற்றை தலைமைக்கு கொண்டு வந்து விடலாம் என எடப்பாடி பழனிசாமி காய்களை நகர்த்தி வருவதாகவும், இதனை பன்னீர் செல்வம் கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஓ.பி.எஸ்.

அதே சமயம் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை விவகாரம் குறித்து யாரும் இன்னும் வெளிப்படையாக பேசவில்லை. இதனால் இந்த விவகாரம் விவாதத்துக்கு வரும் போது ஓ.பி.எஸ். பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார் என தகவல். இதனால் அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சு வரும் போது எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் இடையே பெரிய மோதல் வெடிக்கும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.