ஐபிஎல் ஏலம்: கேதார் ஜாதவுக்கு ரூ.2 கோடியா?; ஸ்ரீசாந்த், சச்சின் மகன் தயார்

கேதார் ஜாதவ்


சென்னையில் வரும் 18-ம் தேதி நடக்கும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் 11 வீரர்கள் தங்கள் அடிப்படை விலையை ரூ.2 கோடியாக பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.


14-வது ஐபிஎல் போட்டிக்கான ஏலத்துக்கு 8 அணிகளும் தயாராகி வருகின்றன. தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்பிடம் அளித்துள்ளன.

இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியில் சிறிய அளவிலான வீரர்கள் ஏலம் நடக்கும். ஏனென்றால், 2022-ம் ஆண்டில் கூடுதலாக 2 புதிய அணிகள் இணைவதால், ஒட்டுமொத்தமாக அணிகள் கலைக்கப்பட்டு மிகப்பெரிய ஏலம் அடுத்த ஆண்டில்தான் நடக்கும்.ஆதலால், சிறிய அளவிலான ஏலம் சென்னையில் வரும் 18-ம் தேதி நடக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் தங்களை பதிவு செய்ய வரும் 14-ம் தேதி கடைசி நாளாகும். இதுவரை 814 இந்திய வீரர்கள் உள்ளிட்ட 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 293 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

14-வது ஐபிஎல் போட்டிக்காக 61 வீரர்களுக்கான ஏலம் மட்டுமே நடக்கிறது, இதில் 22 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 207 பேர் ஏற்கெனவே விளையாடியவர்கள், 863 பேர் விளையாடாதவர்கள், 27 பேர் துணை வீரர்களாக இருந்தவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஏலத்தில் 11 வீரர்கள் தங்களின் அடிப்படை விலையை ரூ.2 கோடியாகப் பதிவு செய்துள்ளனர் என்று கிரிக்இன்போ தளம் தெரிவிக்கிறது. இதில் ஆஸி.வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ், வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன், இங்கிலாந்து வீரர்கள் மொயின் அலி, ஜேஸன் ராய், மார்க் வுட், சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட், நியூஸிலாந்து வீரர் காலின் இன்கிராம் ஆகிோயர் பதிவு செய்துள்ளனர்.

டி20 போட்டியில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனான இங்கிலாந்து வீர்ர டேவிட் மலான் இதுவரை ஐபிஎல் ஏலத்தில் பங்ேகற்கவில்லை. முதல்முறையாக தனது பெயரை ஐபிஎல் ஏலத்தில் மலான் ரூ.1.5 கோடி அடிப்படை விலைக்கு பதிவு செய்துள்ளார்.


இதுதவிர முஜிபுர் ரஹ்மான், அலெக்ஸ் காரே, நாதன் கூல்டர் நீல், ரிச்சார்டஸன், டாம் கரன், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லே ஆகியோரும் ரூ.1.50 கோடி அடிப்படை விலைக்கு தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சையில் சிக்கி தண்டனைக் காலம் முடிந்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த், தன்னை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். தனக்கான அடிப்படை தொகையாக ரூ.75 லட்சத்தை ஸ்ரீசாந்த் பதிவு செய்துள்ளார்.

ஆரோன் பிஞ்ச், உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, லாபுஷேன், ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தங்களின் அடிப்படை விலையாக ரூ.ஒரு கோடிக்கு பதிவு செய்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தன்னை ரூ.20 லட்சத்துக்கு அடிப்படை விலையாகப் பதிவு செய்துள்ளார்.