2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் பெரில் இரு புதிய அணிகள்: பிசிசிஐக்கு ரூ.12 ஆயிரம் கோடி: மொத்தம் 74 போட்டிகள்

2022ம் ஆண்டு நடக்கும் ஐபிஎல் டி20 தொடரில் இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தொழிலதிபர் சஞ்சீவ் கயோங்கா, சிவிசி முதலீட்டு நிறுவனம் இரு புதிய அணிகளை ரூ.12,715 கோடிக்கு வாங்கியுள்ளனர். (ஏறக்குறைய 170 கோடி டால்கள்)
இந்த இரு புதிய அணிகளை விற்பனை செய்ததன் மூலம் பிசிசிஐக்கு ரூ.12,715 கோடி கிடைக்கும்.

அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட சிவிசி கேபிடல் அணியும், லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு கோயங்காவின் அணியும் செயல்படும்.


இந்த இரு அணிகளையும் விற்பனை செய்வதன் மூலம் ரூ.10ஆயிரம் கோடி வரை ஈட்டலாம் என பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால், இன்ப அதிர்ச்சியாக கோயங்காவின் ஆர்பி-எஸ்ஜி குழுமம் லக்னோ அணியை ரூ.7,090 கோடிக்கு விலைக்கு வாங்கியது.

சிவிசி கேபிடல்ஸ் நிறுவனம் அகமதாபாத் அணியை ரூ.5,625 கோடிக்கு வாங்கின. பிசிசிஐ நினைத்த தொகையைவிடகூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடிகிடைத்துள்ளது.


கடந்த 2016 மற்றும் 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் அணியை நிர்வகித்ததும் இந்த கோயங்கா நிறுவனத்தின் குழுமம் என்பது குறிப்பிடத்தக்கது.


பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், “லக்னோவை அடிப்படையாக வைத்து ஆர்பிஎஸ்ஜி நிறுவனம் ரூ.7,090 கோடிக்கும், அகமதாபாத்தை அடிப்படையாக வைத்து ஐரேலியா நிறுவனம் (சிவிசி கேபிசல்ஸ்) ரூ.5,625 கோடிக்கும் அணியை விலைக்கு வாங்கியுள்ளனர்” எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.


2022ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும், 74 போட்டிகள் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு அணிக்கும் 7 போட்டிகள் தங்கள் சார்ந்திருக்கும் நகரிலும் மற்ற 7 போட்டிகள் வெளிமாநிலத்திலும் நடக்கும்.


துபாயில் நடந்த இந்த ஏலம் ஏறக்குறைய 7 மணிநேரம் நடந்து அதன் பின் உறுதியானது. 22 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம்தெரிவித்தன.

இறுதியாக 5 நிறுவனங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு ஏலத்துக்கு வர அனுமதிக்கப்பட்டன. குறிப்பாக ஆர்பி-எஸ்ஜி, அதானி குழுமம், இந்துஸ்தான் மீடியா, டோரென்ட் ஃபார்மா, அரபிந்தோ ஃபார்மா, ஆல் கார்கோ, சிவிசி, கோடக் குழுமம், மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்டவை ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தன.


இதில் எம்எஸ் தோனியின் ஸ்போர்ட்ஸ் நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்றது. ஆனால், விதிமுறைகள் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்படவில்லை.

அதாவது, குறிப்பிடத்தகுந்த தொழிலதிபர் ஒருவர் அவரும் ஐபிஎல் அணியை வைத்துள்ளார், அந்த நபர் தோனியின் நிறுவனத்துக்கு சார்பானவர் என்பதால் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.


கோயங்காவின் ஆர்பி-எஸ்ஜி குழுமத்தின் சொத்துமதிப்பு 600 கோடி டாலராகும், ஆண்டுக்கு 400 கோடி வருமானம்ஈட்டுகிறது. எரிசக்தி மின்சாரம், பிளாக் கார்பன் உற்பத்தி, சில்லரை வர்த்தகம், ஐடிசேவை, எஃப்எம்சிஜி , ஊகடம், பொழுதுபோக்கு, கட்டுமானத்துறை, கல்விதுறை போன்றபல்வேறு தொழில்களை நடத்துகிறது கோயங்கா குழுமம்.


கிரிக்கெட் தவிர கால்பந்துலீக் போட்டியில் முதலில் ஏடிகேஅணியை வாங்கியது ஆர்பி-எஸ்ஜி குழுமம், தற்போது, ஏடிகே-மோகுன் போகன் அணியை நடத்தி வருகிறது.