கொல்கத்தா அணிக்கு எதிராக தெளிவான மனநிலைதான் முக்கியம்: டெல்லி வீரர்களுக்கு முகமது கைஃப் அறிவுரை

ஷார்ஜாவில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் குவாலிஃபயர்-2 சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தெளிவான மனநிலையுடன் டெல்லி கேபிடல்ஸ் வீரர்கள் களமிறங்குவது முக்கியம் என்று அந்த அணியின் துணைப் பயி்ற்சியாளர் முகமது கைஃப் அறிவுறுத்தியுள்ளார்.


ஐபிஎல் டி20 போட்டியி்ன் இறுதிப் போட்டிக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றுவிட்டது. சிஎஸ்கே அணியுடன் ஃபைனலில் விளையாடும் அணிக்கான குவாலிஃபயர் 2 சுற்று இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே இன்று ஷார்ஜாவில் நடக்கிறது.


முதல் தகுதிச் சுற்றில் சிஎஸ்கே அணியிடம் 4 விக்கெட்டில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வி அடைந்தது. கடைசி இருபோட்டிகளில் தோல்வி அடைந்ததால் அணி வீரர்களிடையே நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டுள்ளது.


இது குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளர் முகமது கைஃப் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாளை எங்களுக்கு மிகப்பெரிய நாள் காத்திருக்கிறது. எவ்வாறு அழுத்தத்தை, நெருக்கடியை சமாளிக்கப்போகிறோம் என்பதில் இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியும் அழுத்தமானதுதான், இருந்தாலும் இந்த ஆட்டம் எங்களுக்கு சற்று வித்தியாசமானது. அமைதியாக இருந்து, நெருக்கடியான நேரத்தில் மனநிலையை ஒருமுகத்தோடு வைத்திருப்பது முக்கியம்.


சிஎஸ்கே அணியிடம் 4 விக்கெட்டில் தோல்வி அடைந்தாலும், நிச்சயம் மீண்டு வரும். இந்த தொடரில் நாங்கள் சிறப்பாகவிளையாடி இருக்கிறோம். புள்ளிப்பட்டியலிலும் நாங்கள்தான் முதலிடத்தில் இருந்தோம்.

இந்த தொடரில் சிறந்த கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டமாக அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்தாலும், விரைவில் மீண்டுவருவோம். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் வென்று நாங்கள் மீண்டு வருவோம், ஆட்டத்தை வெல்லக்கூடிய வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.

அந்த வீரர்களுக்கு ஏராளமான அனுபவமும் இருக்கிறது, ஃபார்மிலும் வீரர்கள் இருக்கிறார்கள். கடந்த லீக் சுற்றில் கொல்கத்தா அணியுடன் விளையாடியிருக்கிறோம், வென்றிருக்கிறோம்.

இந்தத் தொடரின் முதல்சுற்றில்கூட கொல்கத்தாவை வென்றோம், ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் 2-வது சுற்றில் கொல்கத்தாவிடம் தோற்றுவிட்டோம், ஆனால், போட்டியின்சில பகுதிகள் எங்கள்கட்டுப்பாட்டில் இருக்கும்.

இரு அணிகளுமே சமமான அழுதத்தில்தான் களமிறங்கும்.இரு அணிகளுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டியநெருக்கடியில் விளையாடும்
இ்வ்வாறு முகமது கைஃப் தெரிவித்தார்.