இன்னும் 6 மாதங்களுக்கு விலைவாசி உயர்வு குறையாது: ரிசர்வ் வங்கி கவர்னர் கணிப்பு

நடப்பு நிதியாண்டின் 2வது மற்றும் 3-வது காலாண்டுகள்வரை பணவீக்கம் கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பில்லை. விலைவாசி உயர்ந்தநிலையிலேயேதான் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பணவீக்கம் 8சதவீதத்தை எட்டியதையடுத்து, ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. ஏற்கெனவே இரு நிதிக்கொள்கைக் கூட்டங்களில் 90 புள்ளிகள் வரை ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தி இருந்தது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்ளைக் குழுக் கூட்டம் முடிந்து, முடிவுகளை கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார்.

அதில் பணவீக்கம் குறையாததையடுத்து, கடனுக்கான வட்டியை 50 புள்ளிகள் உயர்த்த நிதிக்கொள்கை குழு முடிவெடுத்தது.

இதன்படி கடனுக்கான வட்டி 5.40 சதவீதமாக அதிகரிக்கும். கொரோனாவுக்கு முந்தைய காலத்தில்கூட வட்டி 5.15 சதவீதம்தான் இருந்தது.

அதைவிட தற்போது வட்டி அதிகரித்துள்ளது. இதற்கிடைய கடந்த ஜூன் மாதம் நடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் நாட்டின் பணவீக்கம் 6.7சதவீதத்துக்கு குறையவாய்ப்பில்லை என்று கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலை மேலும் 6 மாதங்களுக்கு தொடரும் எனத் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு வைத்துள்ளது.

ஆனால், அடுத்த 2 காலாண்டுகளுக்கு அதாவது 2வது மற்றும் 3வது காலாண்டுகள் வரை பணவீக்கம் 6.7சதவீதம்வரை இருக்கும். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருக்கும்.

புவிஅரசியல் சார்ந்த திடீர் நிகழ்வுகள், உணவு மற்றும் உலோகங்கள் விலை, கச்சா எண்ணெய் விலை போன்றவை பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இதன்படி பார்த்தால் 2022ம் ஆண்டில் கச்சா எண்ணெய்விலை சராசரியாக பேரல் 105 டாலரில் கணக்கிட வேண்டியுள்ளது.

பணவீக்கம் நடப்பு நிதியாண்டில் 6.7சதவீதமாக இருக்கும். 2-வது காலாண்டில் பணவீக்கம் 7.1 சதவீதமாக அதிகரிக்கும், 3-வது காலாண்டில் (அக்டோபர் முதல் டிசம்பர் )6.4 சதவீதமாகக் குறையும், 4-வது காலாண்டில் 5.8 சதவீதமாகச் சரியும்.

2023-24ம் ஆண்டின் முதல்காலாண்டில்தான் நுகர்வோர் விலைப் பணவீக்கம் 5 சதவீதத்துக்குள் கீழ் சரியும். அதுவரை விலைவாசி உயர்வு இயல்புக்கு அதிகமாகவே இருக்கும்.

நெல் பயிரிடுதல் குறைந்துள்ளது, விளைச்சலும் குறையும் என்பதால் கண்காணித்து வருகிறோம்.

இருப்பினும் அரசிடம் கையிருப்பு அதிகமாகவே இருக்கிறது.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.