பணவீக்கம் ! சோப்பு முதல் ஸ்நாக்ஸ் வரை…என்ன செய்ய, அதான் குறைச்சிட்டோம்: நிறுவனங்கள் புலம்பல்

நாட்டின் அதிகரிக்கும் பணவீக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் சோப்பு முதல் நொறுக்குத் தீனிகள்வரை அளவையும், எடையையும் நிறுவனங்கள் குறைத்துவிட்டன.

பணவீக்காலத்திலும் பழைய மாதிரியான எடையில், அளவில் பொருட்களை வழங்கினால், தங்கள் உற்பத்திச் செலவுக்கு கட்டுப்படியாகாது என்பதால், அளவு, எடையை நிறுவனங்கள் குறைத்துள்ளன.

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து வருகிறது மார்ச் மாதம் 7 சதவீதமாகவும், ஏப்ரல் மாதம் 7.79 சதவீதமாகவும் அதிகரி்த்துவிட்டது.

இதனால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 40 புள்ளிகள் வட்டியை உயர்த்தியுள்ளது. ஆனாலும், பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை நிறுவனங்களால் தாங்க முடியவில்லை.

பணவீக்க காலத்துக்கு முன்பு வழங்கப்பட்ட பொருட்களை அதே எடையில், அளவில் விலையை மாற்றாமல் வழங்குவது சாத்தியமில்லை என்பதை நிறுவனங்கள் உணர்ந்தன.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய், உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றால் உற்பத்திச் செலவு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகரிப்பதால் வேறுவழியின்றி இந்த வழிக்கு மாறுகிறார்கள் பொருட்களுக்கான விலையை உயர்த்தினால் மக்கள் வாங்குவதைக் குறைத்துவிடுவார்கள் என்பதால் விலையை உயர்த்தாமல் பொருட்களின் அளவையும், எடையையும் குறைத்துவிட்டனர்.

இந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா, டாபர் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தயாரி்ப்புப் பொருட்களின் விலையை உயர்த்தவில்லை. ஆனால், பொருட்களின் எடை, அளவில் மாற்றம் செய்துவிட்டன.

இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் அதிகரிக்கும் பணவீக்கத்தை சமாளிக்க முடியாமல் டோமினோஸ் பீட்ஸா, சப்வே ரெஸ்டாரன்ட் போன்றவை பொருட்களின் விலையை உயர்த்தாமல் அளவையும், எடையையும் குறைத்துள்ளன.

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரிதேஷ் திவாரி கூறுகையில் “அடுத்து 2 அல்லது 3 காலாண்டுகளுக்கு பணவீக்கம் இருக்கும்.

அதுவரை எங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. விலையை உயர்த்தாமல், பொருட்கள் அளவு, எடையைக் குறைத்தல்தான் இப்போதுள்ள தீர்வு” எனத் தெரிவித்தார்.

உதாரணமாக ஒரு நிறுவனத்தின் பாத்திரம் கழுவும் சோப்பு 135 கிராம் எடையில் ரூ.10க்கு விற்கப்படுகிறது.

இது 3 மாதங்களுக்கு முன் இதே 10 ரூபாய்தான், ஆனால் 155 கிராம் எடை இருந்தது. சத்தமில்லாமல் பொருளின் எடையை மட்டும் அந்தநிறுவனம் குறைத்துவிட்டது.

நொறுக்குத்தீனிகள் தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் ஒருநிறுவனம், கடந்த 3 மாதங்களுக்கு முன் ரூ.10க்கு 55 கிராம் வழங்கியது.

ஆனால், தற்போது அதேவிலைதான் ஆனால், 42 கிராம்தான் வழங்குகிறது. இது குறித்து அந்தநிறுவனங்களுக்கு செய்திநிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியும் பதில் இல்லை.

பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள விலை உயர்வை நிறுவனங்களால் எதிர்கொள்வது கடினமாகியுள்ளது. சில நிறுவனங்கள் மட்டுமே பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன.

ஆனால்விலை உயர்வுக்குப்பின் பொருட்கள் விற்பனையில் எண்ணிக்கை அளவில் குறைந்துள்ளது.

வருவாய் அதிகரித்துள்ளது, ஆனால், எண்ணிக்கை அளவில் விற்பனை குறைந்திருக்கிறது.

இதன் காரணமாகவே பல்வேறு நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் அளவையும், எடையையும் மட்டும் குறைத்துள்ளன.