மாற்றுத்திறனாளி சிறப்பு குழந்தையை மோசமாக நடத்திய இன்டிகோ நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்..!

ராஞ்சி விமானநிலையத்தில் கடந்த 7ம் தேதி மாற்றுத்திறனாளி சிறப்புக் குழந்தையை மோசமாக நடத்திய இன்டிகோ விமானநிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7ம் தேதி ராஞ்சி விமானநிலையத்தில் ராஞ்சி-ஹைதராபாத்துக்கு இன்டிகோ விமானநிறுவனத்தின் விமானம் புறப்பட இருந்தது.

அப்போது மாற்றுத்திறனாளி சிறப்பு சிறுவனை அழைத்துக் கொண்டு பெற்றோர் வந்தனர்.

நீண்டநேர கார் பயணத்தில் வந்ததால் சிறுவனுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருந்தது.

இதையடுத்து, விமானநிலையத்தில் அந்தச் சிறுவனுக்கு முறையான உணவும், அன்பாக கவனிப்பையும் பெற்றோர் அளித்ததையடுத்து, சிறுவன் இயல்புநிலைக்கு வந்தார்.

ஆனால், விமானத்தில் ஏறுவதற்கு முன் இன்டிகோ விமானத்தின் மேலாளர், சிறுவன் இயல்புநிலைக்கு வந்தால்தான் விமானத்தில் அனுமதிப்பேன் இல்லாவிட்டால் அனுமதிக்க முடியாது என்று எச்சரித்துள்ளார்.

இந்த சிறுவனை விமானத்தில் அனுமதித்தால் மற்ற பயணிகளுக்கும் அசவுகரிகக் குறைவு ஏற்படு்ம் என்று சிறுவனின் பெற்றோரின்மனதை வேதனைப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சிறுவனின் உடல்நிலையை மதுபோதைக்கு அடிமையானவர்களுடன் ஒப்பிட்டு பேசி அவர்களை அவமதித்துள்ளார்.

இதைப் பார்த்த மற்ற பயணிகள் மேலாளர் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டித்துள்ளனர்.

ஆனால், இன்டிகோ மேலாளர் அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். இதைப் பார்த்த சக பயணி அபினந்தன் மிஸ்ரா என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் வைரலாகியதையடுத்து, இன்டிகோ விமானநிறுவனத்திடம் டிஜிசிஏ விளக்கம் கேட்டது. மேலும், 3 அதிகாரிகளை கடந்த 9ம் தேதி நியமித்து இந்த சம்பவத்தை விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த விசாரணையின் முடிவில், இன்டிகோ நிறுவனத்தின் ஊழியர்கள் அந்த சிறுவனை நடத்தியவிதம் தவறானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இன்டிகோ நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து, டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

டிஜிசிஏ வெளியிட்ட உத்தரவில் “இந்த விசாரணையின் முடிவில், அந்த சிறப்புக் குழந்தையை இன்டிகோ நிறுவனத்தின் ஊழியர் நடத்தியவிதம் மோசமானதாக இருந்தது, அந்தச் சூழலை முகம்சுளிக்க வைத்துள்ளது.

அந்த குழந்தையை கூடுதல் இரக்கத்துடன் அன்புடன், கையாண்டிருந்தால் மென்மையாக இருந்திருக்கும். குழந்தையை அமைதிப்படுத்தியிருக்கலாம்.

அசாதாரண சூழல்களின்போது, நாமும் அதற்கு பதில் அளிக்க தயாராக இருக்க வேண்டும்.

ஆனால், விமானநிறுவன ஊழியர்கள் அந்த சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ளத் தவறினர்.

இதில் சிவில் விமானப் போக்குவரத்தின் விதிகளைக் கடைபிடிக்காமல் தவறு இழைத்துவிட்டனர். ஆதலால், இன்டிகோ நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.