ரூ.1000 கோடியை இழந்த இந்தியர்கள்! போலி கிரிப்டோகரன்ஸி பரிமாற்றத்தில் மோசடி அம்பலம்

போலி கிரிப்டோகரன்ஸி பரிமாற்றத்தின் மூலம் இந்தியர்கள் ரூ.1,000 கோடியை இழந்துள்ளனர் (1.28 கோடி டாலர்) என்று தனியார் சைபர்பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கிரிப்போடகரன்ஸிகள் சந்தித்து வரும் பெரும் சரிவு குறிப்பாக பிட்காயின் மதிப்பு சரிவு ஆகியவற்றாலும், போலி டொமைன் மூலமும், போலி ஆன்ட்ராய் ஆப்ஸ் மூலமும் பணம் செலுத்தியும் இந்தியர்கள் பணத்தை இழந்துள்ளனர் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுட்செக் தெரித்வித்துள்ளது.

சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுட்செக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் சசி கூறுகையில் “போலியான கிரிப்டோகரன்ஸிகளை பரிமாற்றம் செய்தவகையில் இந்தியர்கள் ரூ.1000 கோடியை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

எங்களிடம் வந்து ரூ.50 லட்சத்தை இழந்தவர் ஒருவர் வந்து, கிரிப்டோவாங்குவதற்காக டெபாசிட் கட்டணம், வரி ஆகியவை செலுத்தி ஏமாந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

கிரிப்டோகரன்ஸிக்களை வாங்கும் போலித் தளங்களை உருவாக்கும் ஸ்கேமர்ஸ் இதுபோன்ற நபர்களை இலக்காக வைத்து மோசடியில் ஈடுபடுகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

மோசடி எப்படி நடக்கிறது?

  1. சட்டப்பூர்வமாக கிரிப்டோகரன்ஸி வாங்கும் இணையதளம் உருவாக்குகிறோம் எனக் கூறி போலியான தளங்களை ஸ்கேமர்கள் உருவாக்குகிறார்கள். இந்த தளத்தின்மூலம் கிரிப்டோக்களை வாங்கவும், விற்கவும் என்று விளம்பரம் செய்கிறார்கள்.
  2. இந்த போலியான இணையதளங்கள், பார்ப்பதற்கு உண்மையான கிரிப்டோக்களை வாங்கும், விற்கும் இணையதளங்கள்போல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
  3. மோசடியில் ஈடுபடுவோர் முதலில் சமூகவலைத்தளத்தில் பெண் ஒருவர் பேசுவதுபோல் ப்ரொபைல் உருவாக்கி, கிரிப்டோவில் முதலீடு செய்ய நினைப்பவரிடம் தொடர்பு கொண்டு நட்பை உருவாக்கி, வளர்த்துக்கொள்வார்கள்.
  4. அந்தப் பெண்ணிடம் பேசி ஏமாறும் அந்த நபர் கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்ய தூண்டப்படுவார். அதன்பின் கிரிப்டோவர்த்தகத்தில் ஈடுபடுவார்.
  5. முதலில் கிரிப்டோவில் ஈடுபடும் நபருக்கு நல்ல லாபம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.இதை நம்பி அதிகமான பணத்தை அந்த நபர் முதலீடு செய்ய தூண்டப்படுவார்.
  6. முதலீடு செய்யப்படுவோருக்கு குறிப்பிட்ட தொகைவரை நல்ல லாபம் கிடைக்கும் வகையில் செய்து அவரை ஏமாற்றுவார்கள். அதன்பின் நட்பு வளையத்தை ஏற்படுத்தியிருக்கும் அந்தப் பெண் மூலம் அதிகமான பணத்தை முதலீடு செய்து அதிகலாபம் பாருங்கள் என்று தூண்டிவிடப்படுவார்.
  7. அந்தப் பெண்ணின் பேச்சை நம்பி அதிகமான பணத்தை அந்தநபர் முதலீடு செய்தவுடன் பணம் செலுத்தப்பட்ட கணக்கை செயலற்றதாக்கி, அந்தப் பணத்தை மோசடியாளர்கள் எடுத்துவிடுவார்கள். அந்தப்ப ணத்தை பாதிக்கப்பட்டவர் வாபஸ் பெறாத வகையில் கணக்கு முடக்கப்படும்.
  8. தன்னுடைய வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது குறித்தும், பணம்இழந்தது குறித்தும் பல்வேறு தளங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தாலும் பலன் இருக்காது. அதற்குள் மோசடியாளர்கள் அந்த போலிக்கணக்கை நீக்கிவிடுவார்கள்.