சிகரெட் பிடித்த வாலிபரிடம் போலீஸ் அதிகாரி என கூறி பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது

பொது வெளியில் சிகரெட் பிடித்த வாலிபரை, போலீஸ் அதிகாரி என மிரட்டி, பணம் பறித்த ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ காலனி, மறைமலை அடிகள் தெருவை சேர்ந்தவர் கேசவன்,24. இவர், அண்ணாசாலையில் மோட்டார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.

இவர் நேற்று முன் தினம் மாலை, எழும்பூர் எத்திராஜ் சாலை, டீ கடையில் நின்றபடி சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார்.  

அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த காக்கி பேண்ட், சட்டை அணிந்திருந்த நபர், உயர் போலீஸ் அதிகாரி என கூறி, பொதுவெளியில் சிகரெட் பிடித்தால் கைது செய்வோம் என கேசவனை மிரட்டினார்.

இதனால் கேசவன் பயந்தார். கைது நடவடிக்கை எடுக்க கூடாது என்றால் ரூ.25000 அபராதம் கட்ட வேண்டும் என்றார்.

பின், ஏ.டி.எம்மில் கேசவன் பணம் எடுத்து தந்தார். பணம் வாங்கியதும் அந்த நபர் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிட்டார்.

சந்தேகமடைந்து கேசவன் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் படி, போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, நேற்று சென்னை, நெற்குன்றம், ஜெயராம் நகரை சேர்ந்த டான்ஸ் ஸ்டுவர்ட் 32 என்பவரை பிடித்தனர்.

ஊர்க்காவல் படையில் வேலை பார்க்கும் அவர், போலீஸ் அதிகாரி என கூறி, பணம் பறித்தது தெரிந்தது. இவர் இது போன்று வேறு எங்காவது பணம் பறித்தாரா என விசாரிக்கின்றனர்