கச்சா எண்ணெய் விலை இந்தியச் சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு..!

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 121 டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும்.

ஆனால், பெட்ரோல், டீசல் விலை தொடரந்து உயர்த்தப்படாமல் இருக்கிறது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு 18 ரூபாயும், டீசலுக்கு லிட்டர் 21 ரூபாயும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த இழப்பை ஏதாவது ஒரு வகையில் ஈடுகட்ட வேண்டும் என்பதால் விலையை உயர்த்தும் எண்ணத்தில் உள்ளன.

ஆனால் நாட்டில் பணவீக்கம் அளவு 7.8 சதவீதத்தை எட்டியதால்தான் மத்திய அரசு பெட்ரோலில் லிட்டருக்கு ரூ.8, டீசலில் லிட்டருக்கு ரூ.6 உற்பத்தி வரியைக் குறைத்தது.

ஆதலால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அ ரசு சம்மதிக்காது.

அவ்வாறு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு செல்லும்.

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் விலைக்கு இணையாக இருக்கிறது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் பெட்ரோலியதிட்டமிடல் மற்றும் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

இந்திய பேஸ்கட் எனப்படும் இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி 25 முதல் மார்ச் 29ம் வரை அதாவது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நேரத்தில், பேரல் 111.86 டாலராக இருந்ததுதான் அதிகபட்சமாகும்.

அதன்பின் மார்ச் 30 முதல் ஏப்ரல் 27 வரை கச்சா எண்ணெய் சராசரி விலையாக பேரல் 103.44 டாலராகக் குறைந்தது.

ஆனால், அமெரிக்காவில் அதிகரிக்கும் வட்டிவீதம், பணவீக்கம், ஆகியவற்றால் கச்சா எண்ணெய் தேவை கடுமையாக அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த வியாழக்கிழமை கச்சா எண்ணெய்விலை 13 வாரங்களில் இல்லாத அளவு விலை உயர்ந்தது.

ஆனால் வெள்ளிக்கிழமை 88 சென்ட் விலை குறைந்து பேரல் 122.26 டாலராகக் குறைந்தது. வெஸ்ட் டெஸ்சாஸ் 120.72 டாலராக குறைந்தது.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையி்ல் முரட்டுத்தனமாக உயர்ந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அமைதியாக வைக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் 7.8சதவீதம் அதிகரித்துள்ளதால், அதைக்கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் உயர்வுக்கு பெட்ரோல்,டீசல் விலை உயர்வு முக்கியக் காரணம். மீண்டும் விலையை உயர்த்தினால் பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் ரிசர்வ் வங்கி மேலும் வட்டியை உயர்த்த வேண்டியதிருக்கும்.

வட்டிவீதம் உயரும்போது பணப்புழக்கம் குறைந்து, பொருளாதார வளர்ச்சி பாதிக்கும். இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை அமைதியாக வைக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும் பெட்ரோல் விலையை உயர்த்தாமல் இருப்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.18, டீசலில் லிட்டருக்கு ரூ.21 நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த இழப்பைச் சரிக்கட்ட எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் எடுக்கலாம் என்பதால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.