இந்திய அணிக்கு இந்த நிலைமையா? பைனலுக்கு இங்கி. செல்லுமா?

இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில் ரூட்


சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வியைத் தொடர்ந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் இந்தத் தோல்வி மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு நியூஸிலாந்து அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது.

நியூஸிலாந்து அணியுடன் விளையாடப் போகும் அணி இந்தியாவா அல்லது இங்கிலாந்து அணியா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி இருந்தது.

ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்குப் பின், இந்திய அணி மோசமாக 4-வது இடத்துக்கு 68.3 சதவீதப் புள்ளிகளுடன் சரிந்துள்ளது. அடுத்துவரும் 3 டெஸ்ட்போட்டிகளில் இங்கிலாந்த அணியை 2-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் அல்லது, 3-1 என்ற கணக்கில் இந்தியஅணி வென்றால்தான் இறுதிச்சுற்றுக்குச் செல்ல முடியும்.

அதேசமயம், இங்கிலாந்து அணி 70.0 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 3-1 என்ற கணக்கிலோ அல்லது 3-0, அல்லது 4-0 என்ற கணக்கில் இந்திய அணியை வென்றால் இங்கிலாந்து அணி இறுதிச்சுற்றுக்குச் சென்றுவிடும்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தாலோ அல்லது, 1-0 என்ற கணக்கிலோ, 2-1 என்ற கணக்கிலோ அல்லது 2-0 என்ற கணக்கிலோ முடிந்தாலோ ஆஸ்திரேலிய அணி இறுதிச் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.