டி20 தொடரை வென்றது இந்திய அணி: கோலி, ரோஹித் சர்மா அபாரம்

கோப்பையை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி


அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டி20 போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்து 36 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கணக்கில் வென்று இந்திய அணி கோப்பையை வென்றது.

4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழத்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

இந்திய அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி அமைத்துக் கொடுத்த அடித்தனர் தான் காரணம். கேப்டனும், துணைக் கேப்டனும் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கி இங்கிலாந்து பந்தை துவம்சம் செய்தனர். ரோஹித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கோலி, பாண்டியா இருவரும் கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

கோலி 52 பந்துகளில் 80 ரன்களுடனும், (7பவுண்டரி, 2சிக்ஸர்), பாண்டியா 17 பந்துகளில் 39 ரன்களுடன் (4பவுண்டரி, 2 சிக்ஸர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் பாண்டியா கோலி கூட்டணி 67 ரன்கள் சேர்த்தனர்.

225 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே ஜேஸன் ராய் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பட்லர், மலான் சேர்ந்து இங்கிலாந்து அணியை மெல்ல வெற்றிக்கு நகர்த்தினர்.

இரு வீரர்களையும் பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். ஆனாலும், இருவரும் சேர்ந்து இந்தியப் பந்துவீச்சை நொறுக்கினர்.

பட்லர் 30 பந்துகளிலும், மலான் 33 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரும் களத்தில் இருந்த வரை இந்திய அணியின் வெற்றி தேர்தல் தான் இருந்தது.

புவனேஷ்வர் குமார் வீசிய 13-வது ஓவரில் பட்லர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். இது தான் ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 130 ரன்கள் சேர்த்தனர்.

தாக்கூர் வீசிய 15-வது ஓவரில் டேவிட் மலான் 68 ரன்னில் வெளியேறினார், அதே ஓவரில் பேர்ஸ்டோ (7) வெளியேறினார். அதன்பின் வந்த மோர்னா (1), ஸ்டோக்ஸ் (14), ஜோர்டான் (11), ஆர்ச்சர்  (1) என அடுத்தடுத்து விரைவாக ஆட்டமிழந்தனர். 130 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 58 ரன்களைச் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.

சாம் கரன் 14 ரன்களுடனும், ரஷித் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

இந்தியத் தரப்பில் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.