பேட்டிங் சொதப்பல், மோசமான கேப்டன்ஸி: இந்திய அணியைப் பந்தாடியது இங்கிலாந்து

ஜேஸன் ராய்

அகமதாபாத்தில் நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 125 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

3 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

டி20 போட்டியில் நம்பர் ஒன் அணிக்கு எதிராக இந்திய அணி நேற்று அடித்த 124 ரன்களை வைத்துக் கொண்டு முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று கேப்டன் கோலி நம்பினால், அதைவிட கேலியானது வேறு ஏதும் இருக்க முடியாது.

அகமதாபாத் ஆடுகளத்தில் மொத்தம் 11 பிட்ச் இருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆடுகளம் என நினைத்து கோலி, 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து எந்தத் துணிச்சலில் ஆடினார் எனத் தெரியவில்லை.

தோல்வியின் அழுதத்தை பந்துவீச்சாளர்கள் மீது சுமத்தாமல், பேட்டிங்கில் சொதப்பிய விஷயங்களை சரி செய்து, சரியான வீரர்களையும் தேர்ந்தெடுத்து அடுத்தப் போட்டியில் விளையாட வேண்டும்.

இந்திய அணியின் தோல்விக்கு தவறான கேப்டன்ஷி முடிவும், டாப் ஆர்டர் பேட்டிங்கில் சொதப்பியதும் தான் காரணம். கேப்டன் விராட் கோலி நேற்று முன் தினம் வரை ரோஹித் சர்மா, ராகுல் தான் ஆட்டத்தைத் தொடங்குவார்கள் என உறுதியாகக் கூறிவிட்டு ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளித்தது ஏன் எனத் தெரியவில்லை.

ஃபார்மில் இல்லாத ஷிகர் தவண் 3-வது ஓப்பனராகவே வைத்திருக்க வேண்டும் என்று பேசப்பட்ட விஷயத்தை நேற்று தனது சொதப்பலான பேட்டிங்கில் நிரூபித்து விட்டார்.

கேப்டன் கோலி கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.

பவர்ப்ளேயில் சிறப்பாக பந்துவீசக் கூடியவர் வாஷிங்டன் சுந்தர். அவருக்கு மிகவும் தாமதமாகவே கோலி ஓவரைக் கொடுத்தார். ஏறக்குறைய வெற்றி இங்கிலாந்தின் கைகளுக்குச் சென்ற பின் சுந்தரை பந்துவீசச் செய்வதில் என்ன பயன்.

ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் இல்லாவிட்டால் இந்திய அணியின் மதிப்பு, கவுரவம் முதல்ஆட்டத்திலேயே காற்றில் பறந்திருக்கும். ரிஷப்பந்த் அருமையான ஃபார்மில் இருப்பதை நிரூபித்து விட்டார், ஷாட் செலக்ஸன் மட்டும் சரியாக இருந்திருந்தால், நேற்று பட்டையை கிளப்பி இருப்பார். அதிலும் 140 கி.மீ வேகத்தில் வீசிய ஜோப்ரா ஆர்ச்சரின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப்பில் ஆடிய ரிஷப் பந்த்தின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

125 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் ஜேஸன் ராயை ஐபிஎல் ஏலத்தில் எந்த அணி நிர்வாகமும் விலைக்கு வாங்கவில்லை. ஆனால், தன்னுடைய பேட்டிங் ஃபார்மை முதல் போட்டியில் வெளிப்படுத்தி பாடம் நடத்தி விட்டார்.

பவர்ப்ளேயில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் சேர்த்த போது, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் பட்லர், ராய் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களுக்கு கொண்டு சென்று விட்டனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். சஹல் பந்துவீச்சில் பட்லர் 28 ரன்னில் கால் காப்பில் வாங்கி வெளியேறினார். அடுத்து டேவிட் மலான் களமிறங்கினார்.

அரைசதம் நோக்கி நகர்ந்த ராய், 32 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்த நிலையில், சுந்தர் பந்துவீச்சில் கால் காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். மலான் 24, பேர்ஸ்டோ 26 ரன்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணி 8 விக்கெட்டில் வென்றது.

முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் தவண் (4), ராகுல் (1), கோலி (0) ஆகியோரின் விக்கெட்டுகள் சரிந்தன. 22 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட 3-வது மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். அதிரடியாகத் தொடங்கிய பந்த் 21 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் அய்யர் ஓரளவுக்கு தாக்குப் பிடித்தனர். மிகவும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர், 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஹர்திக் பாண்டியா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 19 ரன்னில் ஆர்ச்சர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். தாக்கூர் வந்த வேகத்தில் ஆர்ச்சர் பந்தில் அதிரடியாக ஆட முற்பட்டு விக்கெட்டை இழந்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்னில் ஜோர்டான் பந்துவீச்சில் மலானால் கேட்ச் பிடிக்கப்பட்டு வெளியேறினார். கடைசி 15 ரன்களுக்கு மட்டுமே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. இங்கிலாந்து அணித் தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.