அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்! 2 நாட்களில் 20 பேர் கொன்று குவிப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் உச்ச கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது, கடந்த 2 நாட்களில் பல்வேறு நகரங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணத்தில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 10 பேர் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அடுத்த 48 மணிநேரத்துக்குள் கலிபோர்னியா மாகாணத்தில் 3 வெவ்வேறு நகரங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாப் மூன் பே நகரில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஒரு பண்ணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர், 3 பேர் வர்த்தக மையத்தில் கொல்லப்பட்டனர்.

ஹாப் மூன்பே நகர போலீஸார் கூறுகையில் “இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். விரைவில் உண்மை நிலவரம் தெரியவரும்” எனத் தெரிவித்தார்.

சிகாகோவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர், 3 பேர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறிய போலீஸார் தீவிரமாக குற்றவாளிகளைத் தேடி வருகிறார்கள்.

லோவா நகரில் உள்ள டெஸ் மோனிஸ் பகுதியில் மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில், 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் காயமடைந்தார்.

டெஸ் மோனிஸ் நகர போலீஸார் கூறுகையில் “துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இருவருமே மாணவர்கள், 3வது நபர் பள்ளியில் பணியாற்றும் ஊழியர் குண்டு காயத்தால் தீவிர சிகிச்சையில் உள்ளார். துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.

2023ம் ஆண்டு தொடங்கியபின் நடக்கும் 6வது மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு இதுவாகும். கடந்த 2 நாட்களில் மட்டும் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

2018ம் ஆண்டிலிருந்து பள்ளிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் 150 நடந்துள்ளன. இதில் கடந்த ஆண்டு மட்டும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 51 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் கடந்த ஆண்டு டெக்சாஸில் உள்ள வால்டே நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 21 பேர்கொல்லப்பட்டதுதான் மோசமானதாகும்.