பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக கோஷம்: காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் சஸ்பெண்ட் : பாஜக புகார் எதிரொலி

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாகவும், புகழந்தும் கோஷமிட்ட காஷ்மீர் மாணவர்கள் 3 பேரை ஆக்ரா கல்லூரி சஸ்பெண்ட் செய்துள்ளது.


துபாயில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோல்வி அடைந்து 13-வது முறையில் முதல் வெற்றியைப் பெற்றது.


பாகிஸ்தான் வரலாற்று வெற்றி பெற்றதை அந்நாட்டுமக்கள் கொண்டாடினார்கள். ஆனால், அதை இந்தியாவில் உள்ள காஷ்மீர் மக்களும் கொண்டாடியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


உத்தரப்பிரதேசம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிச்பூர் நகரில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் கல்லூரியில் பயிலும் காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள், இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தானைப் புகழ்ந்தும், வீரர்களைப் புகழ்ந்தும் கோஷமிட்டனர்.

இது தொடர்பாக வீடியோவும் வைரலானது.
இதையடுத்து, பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் ஜகதீஸ்புரா காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த புகார் பெற்ற காவல்நிலைய அதிகாரி விகாஸ் குமார், தகுந்த நடவடிக்கை எடுக்க காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
போலீஸார் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் நேற்று சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது.


இதுகுறித்து கல்லூரி நிர்வாக இயக்குநர் டாக்டர் பங்கஜ் குப்தா கூறுகையில் “போலீஸார் விசாரணை, புகாரைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 மாணவர்களும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த 3 மாணவர்களும் பிரமதர் சூப்பர் சிறப்பு திட்டத்தின் கீழ் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களின் செயல்பாடு குறித்து பிரதமர் அலுவலகத்துக்கும், ஏஐசிடிஇ அமைப்புக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். மாணவர்களும் தங்கள் செயலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளனர்” எனத் தெரிவி்த்தார்.


பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் உள்ளூர் தலைவர் ஷைலு பண்டிட் கூறுகையில் “ஆர்பிஎஸ் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்கள் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டுள்ளார்கள்.

அவர்களின் சமூக ஊடகப் பதிவையும் அனுப்பி வைத்தேன். இது குறித்து நாங்கள் கல்லூரிநிர்வாகத்துக்கும் தெரியப்படுத்தினோம். இதையடுத்து அந்த 3 மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்துவிட்டதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த 3 மாணவர்களும் தேசவிரோதமாகச் செயல்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்” எனத் தெரிவி்த்தார்