டி20 தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த பாபர் ஆஸம்: பும்ரா மட்டுமே ஆறுதல்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட டி20 போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில் பேட்ஸமேன்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.


நமிபியா (70), ஆப்கானிஸ்தான்(51) ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து அரைசதங்களை அடித்ததையடுத்து, முதலிடத்திலிருந்த டேவிட் மலானை கீழே இறக்கி முதலிடத்தில் பாபர் ஆஸம் 834 புள்ளிகளுடன் அமர்ந்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 798 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். கடைசியாக பாபர் ஆஸம் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 28-ம்தேதி டி20 வரிசையில் முதலிடத்தில் இருந்தபின் 2 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஒருநாள் தரவரிசையிலும் பாபர் ஆஸம்தான் முதலிடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடத்திலிருந்த டேவிட் மலான் ஓர் ஆண்டுக்குப்பின் கீழே இறங்கியுள்ளார்.


ஆஸ்திரேலியா, இலங்கைக்கு எதிராக அரைசதம், சதம் அடித்த இங்கிலாந்து வீர்ர ஜாஸ் பட்லர், தரவரிசையில் 8 இடங்கள் நகர்ந்து 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து வீரர் ஜேஸன் ராய் 5 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஹசரங்கா 776 புள்ளிகளுடன் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப முதல்முறையாகப் பிடித்துள்ளார்.

770 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் தப்ரெஸ் ஷாம்ஸி 2-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் அதில் ரஷித் 3-வது இடத்திலும், 4-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானும் உள்ளனர்.


இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 10 இடங்கள் நகர்ந்து 24-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரிச் நோர்க்கியா 18 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளார்.