குப்பை தொட்டியில் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகள்..!

சென்னை, வேப்பேரி பகுதியில் குப்பை தொட்டியில், மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 சென்னை, வேப்பேரி, கலத்தி அப்பா பிரதான சாலையில், குப்பைத் தொட்டி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, குப்பைகளை லாரியில் அள்ளுவதற்காக  மாநகராட்சி ஊழியர்கள்  வந்தனர்.

அவர்கள், அங்கிருந்த குப்பையை அகற்றும்போது, ஒரு பெரிய பிளாஸ்டிக் பையில் மனித மண்டை ஓடு, எலும்புகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

 உடனே அவர்கள், வேப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அந்த  எலும்புகளை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

பின்னர் அவற்றை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த எலும்புகள் யாரால் வீசப்பட்டது, என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில்,எலும்புகளில் வார்னீஷ் அடிக்கப்பட்டிருந்ததால் அது மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்புக்காக பயன்படுத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.