ராகேஸ் அஸ்தானாவுடன் மோதிய முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை: உள்துறை அமைச்சகம் பரிந்துரை

டெல்லி போலீஸ் ஆணையராக தற்போது இருக்கும் ராகேஷ் அஸ்தானாவுடன் மோதலில் ஈடுபட்ட முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

1979-ம் ஆண்டு ஐபிஎஸ் கேடர் (ஓய்வு) அதிகாரியான அலோக் வர்மா சிபிஐ இயக்குநராக இருந்தார். அவரின் பதவிக் காலத்தில் குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியும், சிபிஐ உதவி இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் அலோக் வர்மாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள், அதன்பின் இருவரும் அந்தப் பதிவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு வேறு ஒருவர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தற்போது ராகேஷ் அஸ்தானாவுக்கு பதவிக்காலம் முடிய இன்னும் ஓர் ஆண்டு இருக்கும் நிலையில் பிஎஸ்எப் இயக்குநர் பதிவியிலிருந்து டெல்லி போலீஸ் இயக்குநர் பதவிக்கு மத்திய உள்துறை மாற்றியது.

1984-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா குஜராத் பிரிவைச் சேர்ந்தவர். கடந்த 2020ம் ஆண்டு பிஎஸ்எப் பிரிவின் டிஜிபியாகப் பொறுப்பேற்ற நிலையில் இப்போது டெல்லி போலீஸ் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி பிராகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக அஸ்தானா டெல்லி போலீஸ் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. காவல் ஆணையர்களை நியமிக்கும் போது அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணிக்காலம் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் அலோக் வர்மா பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் அவர் தனது பணிக்காலத்தில் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார், விதிகளை மீறியுள்ளார் எனக் கூறி அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை எடுக்குமாறு மத்திய பணியாளர் துறைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

உள்துறை அமைச்சகம் அனுப்பிய பரிந்துரையில், “அலோக் வர்மா தனது பணிக்காலத்தில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். ஆதலால், அவர் மீது தேவையான ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கலாம். அவரின் ஓய்வூதியம், ஒய்வூதியப் பலன்களை நிரந்திரமாக நிறுத்தி வைத்தோ அல்லது தற்காலிகமாகவோ நிறுத்தி வைக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி சிபிஐ இயக்குநராக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட அலோக் வர்மா, 2019ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி நீக்கப்பட்டார். அவரை அதிகாரமில்லாத, முக்கியத்துவம் இல்லாத தீயணைப்பு துறை, சிபில் பாதுகாப்பு, ஹோம் கார்டு இயக்குநராக நியமித்தது மத்திய அரசு.