இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதானி குழுமம் 413 பக்கத்தில் அறிக்கை

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல், இந்த நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்கள் என்று அதானி குழுமம் 413 பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த புதன்கிழமை அதானி குழுமம் கடந்த 10 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் செய்த மோசடிகள், தில்லுமுல்லு, பொய்கணக்கு, பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியது உள்ளிட்டவற்றை வெளிச்சம்போட்டு காட்டி அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் அனைத்தும் ஆட்டம் கண்டன. 2 நாட்களில் அதானி குழுமப் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் சரிந்தது, ஏறக்குறைய அதானி குழுமத்துக்கு ரூ.4 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அறி்க்கையால் அதானி குழுமம் சந்தை மதிப்பு 5000 கோடி டாலரை இழந்துள்ளது. அதானி மட்டும் 2000 கோடி டாலரை இழந்துள்ளார். அதாவது அவரின் சொத்துமதிப்பில் ஐந்தில் ஒருபகுதியை இழந்துள்ளார்.

இந்நிலையில் அதானி குழுமம் ஹிண்டர்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்துக்குப் பதிலடி தரும் வகையில் 413 பக்கங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஹண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை என்பது அமெரிக்க நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் அதிகமான நிதி ஆதாயங்கள் அடைய வேண்டும் என்பதற்காக, பொய்யான சந்தையை உருவாக்கும் நோக்கில், மறைமுக நோக்கில் வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.

ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது, தனிப்பட்ட நிறுவனத்தின் மீதான தாக்குதல் அல்ல, ஆனால் இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல். இந்தியாவின் சுதந்திரம், நேர்மை, இந்திய நிறுவனங்களின் தரம், வளர்ச்சி வரலாறு, இந்தியாவின் இலக்கின் மீதான தாக்குதல்.

ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது ஒன்றுமில்லை அனைத்தும் பொய்கள். இந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட தவறான தீங்கு விளைவிக்கும் தகவல்கள், ஆதாரமற்ற மற்றும் மதிப்பிழந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகளை மறைத்து, ஒரு உள்நோக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டவையாகும்.

இந்த அறிக்கையில் நலன்சார்ந்த முரண்பாடு இருக்கிறது. பொய்யான சந்தையை உருவாக்கி, குறுகிய விற்பனையாளர்கள், நிறைந்த நிதி ஆதாயத்தை அடையும் விதத்தில் தவறான சந்தையை உருவாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹிண்டன்பேர்க் இந்த அறிக்கையை எந்தவொரு நல்ல எண்ணங்களுக்காக வெளியிடவில்லை, ஆனால் முற்றிலும் சுயநல நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டது. அந்நிய செலாவணி சட்டங்களை அப்பட்டமாக மீறியுள்ளது. அறிக்கை சுதந்திரமானதும் அல்ல உண்மையானதும் அல்ல, நன்கு ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையும் அல்ல.

ஹிண்டன்பர்க் நிறுவனம் எழுப்பிய 88 கேள்விகளில் 65 கேள்விகளுக்கு பதில் அளி்க்கப்பட்டுவிட்டது. 23 கேள்விகளில் 18 கேள்விகள் பங்குதாரர்கள், மூன்றாம் தரப்பினர் குறித்தானது.

மீதமுள்ள 5 கேள்விகள் ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகள்
நாட்டின் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு நாங்கள் இணங்கி செயல்படுகிறோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். எங்கள் பங்குதாரர்கள் அனைவரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், நிர்வாகத்தை மிக உயர்ந்த மட்டத்தில் நடத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

அதானி குழும பங்குகள் மிகவும் வலுவான உள் கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. அதானி குழும பங்குகள் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் வலுவான நிர்வாக கட்டமைப்பைக் கொண்டுள்ளன.

எங்கள் பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய அதிகாரிகள் முன் எங்கள் உரிமைகளைக் கூறுவோம். ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க எங்களுக்கு உரிய உரிமைகளைப் பயன்படுத்துவோம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது