குஜராத்தில் கொரோனாவில் 3 லட்சம் பேர் உயிரிழப்பா? ராகுல் காந்தி குற்றச்சாட்டு பாஜக அமைச்சர் பதிலடி அகமதாபாத்

குஜராத்தில் கொரோனா 2-வது அலையில் 3 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், அதிகாரபூர்வமாக 10ஆயிரம் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியதற்கு குஜராத் அமைச்சர் ஜித்து வாஹனி கண்டனம் தெரிவித்துள்ளார்.


குஜராத் மக்களை தவறாக வழிநடத்துகிறார், மாநிலத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் நோக்கில் பேசும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சொல்லப்படும் அதிகாரபூர்வ கரோனா உயிரிழப்பும் இதுபோன்று ஜோடிக்கப்பட்டது என்று கூறுவாரா என குஜராத் கல்வி அமைச்சர் ஜித்து வாஹினி கேள்வி எழுப்பியுள்ளார்.


குஜாரத்தில் கரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நேரத்தில் உதவிகளை சேரவில்லை அவர்கள் பாதிக்கப்படும் நிலை குறித்து 4.31 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.


இதற்கு காங்கிரஸ் நியாயப் பிரச்சாரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ராகுல் காந்தி பேசுகையில் “குஜராத் மாடல் எனப் பேசுகிறார்கள்.

ஆனால், கொரோனா காலத்தில் எந்த மருத்துவமனையிலும் படுக்கை கிடைக்கவில்லை, வென்டிலேட்டர் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள்.


கொரோனாவில் 10 ஆயிரம் பேர் இறந்ததாக குஜராத் அரசு கணக்கில் தெரிவிக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால் கரோனா தொற்றால் 3 லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளார்கள்.

குஜராத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வீட்டுக்கு வீடு சென்று கணக்கெடுத்துள்ளார்கள். கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.4 லட்சம் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவி்த்துள்ளார்.


காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு குஜராத் கல்வி அமைச்சர் ஜித்து வாஹனி பதிலடி கொடுத்துள்ளார். காந்திநகரில் நிருபர்களுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
கொரோனா காலத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கும், வேறுபல காரணங்களால் உயிரிழந்தவர்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது.

குஜராத்தில் கொரோனாவில் 3 லட்சம் பேர் உயிரிழந்ததாக ராகுல் காந்தி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. இதுபோன்று குஜராத் மாநிலத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலை நாங்கள் கண்டிக்கிறோம்.

பொய்யான தகவலைக் கூறி மக்களை பதற்றத்திலும், அச்சத்தையும் ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரமாகும். குஜராத் அரசின் கணக்கின்படி கரோனா காலத்தில் 10,088 பேர் உயிரிழந்தனர்.

ராகுல் காந்தி கூறுவதுபோல் 3 லட்சம் பேர் அல்ல.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, என்சிபி கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மகாராஷ்டிராவில் 1,40,807 பேர் கொரோனாவில் உயிரிழந்ததாக அரசு கூறுகிறது. பஞ்சாப்பில் 16,553 பேர், ராஜஸ்தானில் 8,954 பேர், சத்தீஸ்கரில் 13,552 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவிக்கிறது.

ஆம்ஆத்மி ஆளும் டெல்லியில் கரோனாவில் 25,091 பேர் உயிரிழந்ததாகக் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படியென்றால் ராகுல் காந்தி ஊடகத்தின் முன்வந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பொய்யானது ஜோடிக்கப்பட்டது எனக் கூறுவாரா, ஊடகங்களில் பதில் அளிப்பராா.

கொரோனா காலத்தில் வேறு பல காரணங்களால் உயிரிழந்தவர்களையும் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எனக் கூறி ராகுல் காந்தி மக்களை தவறாக வழிநடத்துகிறார்.

கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தரக்கோரும் விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது அதில் முடிவெடுக்க முடியாது.

உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலின்படி, கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச்சான்று வழங்கப்படுகிறது.
இவ்வாறு கல்வி அமைச்சர் வாஹனி தெரிவித்தார்.