நாம் எங்கே செல்கிறோம்? பும்ரா, புவனேஷ் அர்ப்பணிப்புடன் இருந்தார்களா? முகமது ஷமிக்கு ஆதரவாக கம்பீர் கருத்து

முகமது ஷமிக்கு எதிராகவும், அவரின் நேர்மையையைப் பற்றி கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார்கள். அப்படியென்றால், பும்ரா, புவனேஷ்வர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நேர்மையானவர்க என்று அர்த்தமா என்று ஷமிக்கு ஆதரவாக கம்பீர் கேள்விஎழுப்பியுள்ளார்.


துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்தது.


இந்த தோல்வியைத் தாங்க முடியாத ரசிகர்கள் ஆட்டத்தில் மோசமாகப் பந்துவீசிய 3.5 ஓவர்களில் 43 ரன்கள் வழங்கிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை அவதூறாக சமூக ஊகடங்களில் விமர்சித்தனர்.

முகமது ஷமி குறித்தும் அவரின்குடும்பத்தினர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மோசமாக ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவமானப்படுத்தினர். ஷமியை டேக் செய்து தொடர்ந்து ட்ரால் செய்தனர்.


முகமது ஷமிக்கு ஆதரவாக கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் சச்சின், இர்பான் பதான், சுனில் கவாஸ்கர், அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, ஒவைசி போன்றோர் ஆதரவு அளித்துள்ளனர்.


இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் நாளேடு ஒன்றில் ஷமி்க்கு ஆதரவாக கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் “ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது.

ஆனால், திங்கள், செவ்வாய்கிழமைகளில் இந்திய அணி வீரர் முகமது ஷமியின் நேர்மை குறித்து பலவாறு கேள்வி் எழுப்புகிறார்கள் எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்.

நான் கேட்கிறேன் ஜஸ்பிரித் பும்ரா அல்லது புவனேஷ்வர் குமார் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூடுதல் அர்ப்பணிப்புடன் பந்துவீசினார்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா. நாம் எங்கே செல்கிறோம்.


எனக்கு ஷமி குறித்து நன்கு தெரியும், கொல்கத்தா அணியை வழிநடத்தியபோதிலிருந்து ஷமியை எனக்கு நன்கு தெரியும். ஷமி கடின உழைப்பாளி, அருமையான வேகப்பந்துவீச்சாளர்.

ஆனால், துரதிர்ஷ்டமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சரியாக பந்துவீச முடியவில்லை. இதுபோன்று எந்த வீரருக்கும் நடக்கூடியதுதான்.

நாம் ஏன், பாகிஸ்தான் சிறப்பாக விளையாடினீர்கள் என்று ஏன் சொல்லக்கூடாது. இதை விட்டுவிடலாமே. எனத் தெரிவித்துள்ளார்.