78% விளம்பரச் செலவு! போதும்பா… கல்வி, சுகாதாரத்தில் கவனம் செலுத்துங்க: நாடாளுமன்றக்குழு அரசுக்கு பரிந்துரை

பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 78 சதவீதத்தை விளம்பரத்துக்கு மட்டும் மத்திய அரசுக்கு செலவிட்டள்ளதை மறுபரீசிலனை செய்து இனிமேல் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் அதிகமாகச் செலவிடுங்கள் என்று நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2016 முதல் 2019ம் ஆண்டுவரை பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டத்துக்கு ரூ.446.72 கோடி அரசு ஒதுக்கியது. இதில் 78.91 சதவீதத்தை விளம்பரத்துக்கு மட்டுமே மத்திய அரசு செலவிட்டுள்ளது.

பெண்களுக்கான அதிகாரமளித்தல் குறித்த குழு தனது 6-வது அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. “கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டம் பற்றிய சிறப்பு குறிப்பு” என்ற தலைப்பில் அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 6 ஆண்டுகளாக பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வேறு எந்தப்பணியும் செய்யாமல் அரசியல் தலைவர்களை முன்னிறுத்தி விளம்பரத்துக்காக மட்டும் 78 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு இனிமேலும் செலவிடுவது குறித்து மறுபரிசீலனை செய்து, அதில் உள்ள நிதியை குழந்தைகளின் கல்வி, சுகாதாரத்துக்காக செலவிடலாம்.

மாவட்ட அளவில் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி, பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டம் எவ்வாறு இருக்கிறது, அதன் தாக்கம் என்ன, மக்களிடம் இருக்கும் வரவேற்பு குறித்து கூட்டம் நடத்த வேண்டும்.

பெண் குழந்தைகள் காப்போம் திட்டத்தில் மாவட்ட அளவில், மண்டல அளவில், கிராமப்பஞ்சாயத்து அளவில் செய்யப்பட்ட பணிகள் குறித்து ஆவணப்படுத்த வேண்டும், அறிக்கையாக, புகைப்படத் தொகுப்பாக அளிக்க வேண்டும்.

கூட்டம் நடத்துவதிலும், அறிக்கை தாக்கல் செய்வதிலும், மாதாந்திர அறிக்கை அளிப்பதிலும், செலவினம் குறித்த அறிக்கை தாக்கல் செய்வதிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

இதைக்களைய வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளுக்கு கட்டுப்படாவிட்டாலே, இந்ததிட்டம் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை, மறுஆய்வு செய்யபப்படவில்லை என்று அர்த்தமாகும்.

சீரான இடைவெளியில் திட்டம் குறித்த அறிக்கை, செயல்பாடுகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்வது அவசியமாகும்.

பெண்குழந்தைகளைக் காப்போம் திட்டம் தொடர்பாக தேசிய அளவில், மாநில அளவில், மாவட்ட அளவில், விதிமுறைகளைப் பின்பற்றி நடக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.