ஒரு வருடம் தலைமறைவாக இருந்த பிரபல தாதா, 20 கிலோ கஞ்சாவுடன் கைது,ஈசிஆர் ரோட்டில் சுற்றி வளைத்தனர்

ஒரு வருடம் தலைமறைவாக இருந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வடசென்னையின் பிரபல தாதா, ஈசிஆர் ரோட்டில் வைத்து சுற்றி வளைத்தனர். அவனிடம் இருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில், ரவுடிகள் நடவடிக்கையை கண்காணித்து அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும் படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் வடசென்னையில், டாப் டென் ரவுடிகள் பட்டியலில் இருந்த கல்வெட்டு ரவி, காக்கா தோப்பு பாலாஜி உள்ளிட்டோரை தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன் பேரில் கல்வெட்டு ரவி, சம்போ செந்தில் கூட்டாளியான, தண்டையார்பேட்டை, நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த டேவிட் மகன் மாவீரன் (எ) நெப்போலியன் (41) ஆவார். இவன் மீது நான்கு கொலை வழக்கு, வழிப்பறி, ஆட்கடத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருக்கும் நெப்போலியன், தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டது தனிப்படைக்கு தெரியவந்தது. வடசென்னை இணை கமிஷனர் மேற்பார்வையில், துணை கமிஷனர் சிவபிரசாத் தலைமையில், தனிப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜய் கொண்ட குழு, கிழக்கு கடற்கரை சாலையில் பதுங்கியிருந்த நெப்போலியனை கைது செய்தனர். அவனிடம் இருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. நெப்போலியன், காசிமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். இவன் கூட்டாளி திருவள்ளூர், பேராணம்பட்டு  பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் சரத் (எ) சரத்குமார் (28) கைது செய்யப்பட்டு பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.