வீடுகள் ஒதுக்கியது போல் போலி ஆணை; ரூ.2 கோடி மோசடி நால்வர் கும்பல் கைது

சென்னை, திருவொற்றியூரில் வீட்டு வசதி வாரியத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்தது போல் போலி ஆணை கொடுத்து 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர், சடயங்குப்பத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து (53). இவர் தன் நண்பரும், வீட்டு புரோக்கருமான மணலி, சின்ன மாத்தூரை சேர்ந்த கலியபெருமாள் (65) என்பவரும் சேர்ந்து, குடியிருப்பு நலச்சங்கம் என நடத்தி வந்தனர்.

அதற்காக ஒரு அலுவலகம் வைத்து, அரசு சார்பில் கட்டித்தரப்படும் வீட்டு வசதி வாரிய வீடுகள் வாங்கி தருவதாக திருவொற்றியூர், எர்ணாவூர், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் ஆசை வார்த்தை கூறினர். இதை பலர் உண்மை என நம்பினர்.

மேலும் ஒவ்வொரு நபரிடமும் , வீடுகள் வாங்கி தருவதாக உறுதியளித்து, தலா 10 லட்ச ரூபாய் வரை பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதற்காக ஒவ்வொரு நபர்களிடமும் தனித்தனியாக முன்பணமாக 1.5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை வாங்கினர். ஆனால், அவர்கள் சொன்னபடி வீடுகள் வாங்கி தரவில்லை, இதனால் பாதிக்கப்பட்ட 30க்கும் பேர், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவர்கள், இதுவரை 34 பேரிடம்,  2 கோடியே 80 லட்சம் ரூபாய்‌‌ முன்பணமாக வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் சென்னையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீடு பெறுவதற்கான தாசில்தார் கையெழுத்திட்ட போலி ஆணை ஒன்றையும்  தயாரித்து, பணம் தந்த பொதுமக்களிடம் கொடுத்து ஏமாற்றியதும் தெரிந்தது.

 
இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட திருவொற்றியூரை சேர்ந்த இசக்கிமுத்து, 53, மணலியை சேர்ந்த கலியபெருமாள் (65), திருவொற்றியூர், அப்பர் சாமி கோவில் தெருவை சேர்ந்த முருகன் (32) திருவொற்றியூர், பெரியார் நகரை சேர்ந்த சதீஷ் (45) ஆகிய  நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். மோசடி தொகை அதிகம் இருப்பதால், இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர்.