100-வது டெஸ்டில் சதம் அடித் ரூட்: இங்கிலாந்தைக் கண்டும் திணறும் இந்திய வீரர்கள்

5 இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் பலன் இல்லை


சென்னையில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேரமுடிவில் 3 விக்கெட் இழப்பு 263 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியுள்ளது.


கேப்டன் ஜோ ரூட் 197 பந்துகளில் 128 ரன்களுடன்,(14பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.


ஆட்டம் முடிய 3 பந்துகள் இருக்கும் நிலையில், சிப்ளி 87 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் அருமையான இன்ஸ்விங் பந்தில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு சிப்ளி, ரூட் கூட்டணி 200 ரன்கள் சேர்த்து வலுவான ஸ்கோரை எட்டுவதற்கு அடித்தளம் இட்டனர்.


இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஏற்கெனவே இலங்கை பயணத்தில் இரு டெஸ்ட்களிலும் அடுத்தடுத்து சதத்தை பதிவு செய்த நிலையில், 3-வதாக இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்துள்ளார்

.
தொடர்ந்து அடிக்கும் 3-வது சதமாக ரூட்டுக்கு இது அமைந்துள்ளது. டெஸ்ட் வாழ்க்கையில் ஜோ ரூட் அடிக்கும் 20-வது சதமாகும்.
100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கும் சர்வதேச அளவில் 9-வது வீரர் ஜோ ரூட் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 100 டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 3-வது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் என்பது பெருமைக்குரியது. இதற்கு முன் கடந்த 1968-ல் கோலின் கவுட்ரே(1968), அலெக் ஸ்டீவர்ட்(2000) ஆகியோரும் தற்போது ஜோ ரூட்(2021) சதம் அடித்துள்ளனர்.


இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், சிப்ளி இருவரும் நிதானமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 63 ரன்களில் இருந்தபோது, அஸ்வின் வீசிய 24-வது ஓவரில் ரோரி பர்ன்ஸ் கீப்பர் ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து 33 ரன்களில் வெளியேறினார்.

அடுத்துவந்த லாரன்ஸ் ரன் ஏதும் சேர்க்காமல் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.


63 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்காமல் 2-வது விக்கெட்டையும் இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு சிப்ளி, ரூட் பாட்னர்ஷிப் அணியின் ஸ்கோரை கட்டமைத்தது. சிப்ளி 159 பந்துகளில் அரைசதத்தையும், ரூட் 110 பந்துகளில் அரைசதத்தையும் அடைந்தனர்.

அரைசதம் கடந்த பின், ரூட் பேட்டிங்கில் ரன் சேர்க்கும் வேகம் அதிகரித்தது. அரைசதம் அடிக்க 110 பந்துகளை எடுத்துக்கொண்ட ரூட், அடுத்த 50 ரன்கள் சேர்க்க 54 பந்துகள் மட்டுமே எடுத்துக்கொண்டார்.164 பந்துகளில் ரூட் சதம் கண்டார். இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறியதைக் காண முடிந்தது.

ஆட்டம் முடிய 3 பந்துகள் இருக்கும் நிலையில் பும்ரா வீசிய கடைசி ஓவரில் சிப்ளி கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.

இந்தியத் தரப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.