விராட் கோலிக்கு கொரோனா பாசிட்டிவ்? லண்டனில் தனிமைப்படுத்தப்பட்டார்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திர அஸ்வின் கொரோனாவில் பாதிக்ககப்பட்ட நிலையில் தற்போது முன்னாள் கேப்டன் விராட் கோலியும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விராட் கோலி விடுமுறையைக் கழிக்க மலாத்தீவுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, லண்டன் திரும்பியுள்ளார்.

அப்போது அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என்று ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியஅணி கடந்த 15ம் தேதி லண்டனுக்குப் புறப்பட்டது. அப்போது வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அஸ்வினுக்கு தொற்று இருந்ததால் அவர் அணியுடன் செல்லவில்லை.

தற்போது தனிமைப்பட்டுசிகிச்சையில் இருக்கும் அஸ்வின் விரைவில் குணமடைந்து, அணியில் இணைவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே விராட் கோலியும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் “ஆமாம், விராட் கோலியும், கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார்.

மாலத்தீவுக்கு சென்றுவிட்டு, லண்டன் திரும்பியநிலையில் அவருக்கு தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

தனிமைப்படுத்தப்பட்டு கோலி சிகிச்சையில் உள்ளார்” எனத் தெரிவித்தார். இதற்கிடையே வரும் 24ம் தேதி லீசெஸ்டர்ஷையர் அணியுடன் பயிற்சிஆட்டத்தில் இந்திய அணி விளையாட இருந்தது.

ஆனால், பயிற்சி ஆட்டத்தில் வீரர்கள் பங்கேற்று கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், அந்தப் போட்டி நடக்க வாய்ப்பு இருக்காது எனத் தெரிகிறது.

ஜூலை 1 முதல் 5ம் தேதிவரை எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5-வது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கடைசி டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது. அப்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்திய அணியுடன் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி முடிந்தபின், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 7ம் தேதியும், அதைத்தொடர்ந்து 9 மற்றும் 10 தேதிகளில் நடக்கிறது. ஒருநாள் தொடர் ஜூலை 12, 14 மற்றும் 17ம் தேதிகளில் நடக்கிறது.