எலான் மஸ்கின் முதல் பேச்சு: ட்விட்டர் ஊழியர்கள் கதிகலங்கியது ஏன்? என்ன பேசினார்?

ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் முதல்முறையாக கலந்துரையாடிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், தனது முதல்பேச்சிலேயே ஊழியர்களை கதிகலங்க வைத்தார்.

ட்விட்டர் சமூக வலைதளத்தை 4400 கோடி டாலருக்கு நானே வாங்கிக்கொள்கிறேன் என்று எலான் மஸ்க் அறிவித்தார்.

ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் பங்குச்சந்தையில் பைலிங்கில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது. ஆனால், திடீரென ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

ட்விட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று எலான் மஸ்க் கோரியிருந்தார்.

ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள், ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை ட்விட்டர் நிறுவனத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்குடனான ஒப்பந்தத்தை கிடப்பில் போட்டதேத்தவிர அந்தவிவரங்களை வழங்கவில்லை. ஆனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவில்தான் எலான் மஸ்க் இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலைியில் சான்பிரான்சிஸ்கோ நகரில் ட்விட்டர் மூலம் எலான் மஸ்க், ஊழியர்களுடன் முதல்முறையாக கலந்துரையாடினார்.

அப்போது ட்விட்டர் ஊழியர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு எலான் மஸ்க் பதில் அளித்தார். ட்விட்டர் ஒப்பந்தம் கையொப்பம் ஆனபின் அதன் ஊழியர்களை எலான் மஸ்க் சந்தித்தப்பது இதுதான் முதல்முறை.

அப்போது ஊழியர் ஒருவர் ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் வந்தால் பணிநீக்கம் இருக்குமா என்றார் அதற்கு எலான் மஸ்க் பதில் அளிக்கையில் “இப்போது ட்விட்டரில் வருவாயைவிட செலவு அதிகமாக இருக்கிறது. அது நிறுவனத்துக்கு உகந்தது அல்ல.

ஆதலால் மாற்றங்கள் செய்யப்படும். அந்த மாற்றங்களை நினைத்து சிறந்த ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை” என்று தெரிவித்தார்.

இதில் சிறந்த ஊழியர்கள் என்று மட்டுமே எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளாரேத் தவிர அனைத்து ஊழியர்களையும் குறிப்பிடவில்லை என்பது ஊழியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

எதிர்காலத்தில் ஆட்குறைப்பு ட்விட்டரில் இருக்குமா என்ற ஊழியர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எலான் மஸ்க் பதில் அளிக்கையில் “நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எது ஆரோக்கியமானதோ அதை செய்வோம். சூழலைப் பொறுத்து அது அமையும்.

அனைத்தையும் ஒருவிதமான நியாயமான அம்சங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் ட்விட்டர் வளராது.

ட்விட்டருக்கு குறிப்பிட்ட அளவு பங்களிப்பு செய்யும் ஊழியர் அது பற்றி கவலைப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.