இலங்கையில் பொருளாதார நெருக்கடி; ஒரு நாள் ஊதியம் வழங்கிய டிஜிபி, அனைத்து அதிகாரிகளும் அனுப்புங்கள் என கடிதம்..!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, தன்னுடைய ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய டிஜிபி, மற்ற அதிகாரிகளும் நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர்  சைலேந்திரபாபு அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் எஸ்பிக்கள், ஐஜிக்கள்,சரக டிஐஜிக்கள் ஆகியோருக்கு இன்று  ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இலங்கை மக்களின் துயரை துடைக்கும் வகையில் ,தமிழக முதல்வர், இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
முதல்வரின் வேண்டுகோளின்படி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்குவோருக்கு, உரிய வருமானவரி விலக்கு அளிக்கப்படும். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நான் என்னுடைய ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்குகிறேன்.

மனிதாபிமான அடிப்படையில் நிவாரண நிதி வழங்க விரும்பும் போலீசார், அதிகாரிகள் தங்களால் இயன்ற பண உதவியை செய்தி மக்கள் தொடர்புத்துறை சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுபோல மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ, இசிஎஸ் மூலமாகவோ, காசோலை,வரைவு காசோலை மூலமாகவோ வழங்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.