அதிகாலையில் வங்கியில் தீ விபத்து; 3 ஏசி மிஷின்கள் எரிந்து நாசம்..!

சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் அதிகாலையில், வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 ஏசி மிஷின்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.

சென்னை, விருகம்பாக்கம்,  தங்கல் தெருவில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை உள்ளது.

இந்த வங்கியில் இருந்து இன்று அதிகாலை கரும்புகை வெளியேறியது. இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் கோயம்பேடு, கீழ்ப்பாக்கம்,விருகம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேரத்துக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விருகம்பாக்கம் போலீசார்  வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், தீ விபத்தில் வங்கியில் இருந்த 3 ஏசி இயந்திரங்களும், அங்கிருந்த சில ஆவணங்களும் எரிந்து நாசமாகியிருப்பது தெரிந்தது.

மின் கசிவினால் முதலில் ஏசி தீப் பிடித்து எரிந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.