பயணிகள் தவறவிட்ட நான்கரை சவரன் தாலி செயின் நேர்மையாக ஒப்படைத்த டிரைவர்

பயணிகள் தவறவிட்ட நான்கரை சவரன் தாலி செயினை காவல்துறையினர் உதவியோடு உரியவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு கிடைத்தது.

சென்னை வியாசர்பாடி எஸ்.எம்.நகர் 27வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் வயது(53), இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

நேற்று இரவு 10 மணியளவில் தீவுத்திடல் பொருட்காட்சி அருகே சவாரிக்காக காத்திருந்தபோது அங்கு வில்லிவாக்கம் ஜெகநாதன் தெரு மூன்றாவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி அபி ஆகியோர் குடும்பத்துடன் வந்து வில்லிவாக்கம் வரை சவாரி செல்ல வேண்டும் வர முடியுமா எனக் கேட்டுள்ளார், லூயிஸ் வில்லிவாக்கம் வரை நான் வரமாட்டேன் அருகில் இருந்த ஆட்டோ டிரைவரை கேளுங்கள் எனக் கூறியுள்ளார்.

அந்த ஆட்டோ டிரைவர் சென்ட்ரல் வரை செல்கிறேன் அங்கு இறங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

உடனே அபி பணம் செலுத்துவதற்கு ஆட்டோ ஓட்டுனரிடம் கூகுள் பே உள்ளதா என கேட்டுள்ளனர் அவர் இல்லை என கூறவே, லூயிஸ் தன்னிடம் உள்ள பணத்தை அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கொடுத்துவிட்டு அபியிடம் கூகுள் பே மூலம்  பணத்தை பெற்றுக் கொண்டார் அதன் பிறகு பயணிகள் குறிப்பிட்ட அந்த ஆட்டோவில் ஏறி சென்று விட்டனர்.

அதன் பிறகு இரவு கூகுள் பே நம்பரை வைத்து மீண்டும் லூயிசை தொடர்பு கொண்ட வில்லிவாக்கம் தம்பதியினர் தங்களுடைய நான்கரை சவரன் தாலிச் செயின் காணவில்லை அந்த ஆட்டோ ஓட்டுனரை தொடர்பு கொண்டு கேட்க முடியுமா என கேட்டுள்ளனர் அவர் அந்த ஆட்டோ ஓட்டுனர் யார் என்று எனக்கு தெரியாது எனக் கூறியுள்ளார்.

இருப்பினும் சவாரி ஏறிய இடத்தில் சென்று பார்க்க முடியுமா என தம்பதியினர் கேட்டதன் அடிப்படையில் உடனடியாக லூயிஸ் மீண்டும் வண்டியை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட அந்த இடத்தில் சென்று பார்த்தபோது நான்கரை சவரன் தாலிச் சரடு அந்த இடத்தில்  இருந்தது.

இதனையடுத்து சதீஷ்குமார் மற்றும் அபியை தொடர்பு கொண்ட லூயிஸ் தாலி செயின் என்னிடம் உள்ளது எனக் கூறியதால், காலை வந்து பெற்றுக் கொள்கிறேன் என தம்பதியினர் கூறிவிட்டனர்.

இன்று காலை மீண்டும் அபியின் செல்போனை தொடர்பு கொண்ட போது அபியின் செல் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுனர் லூயிஸ் வியாசர்பாடி காவல் நிலையத்தில் தாலி சரடை ஒப்படைத்துவிட்டு நடந்த தகவலை கூறினார்.

இதனை தொடர்ந்து வியாசர்பாடி காவல்துறையினர்  சதீஷ்குமார் மற்றும் அபியை தொடர்பு கொண்டு வியாசர்பாடி காவல் நிலையத்தில் வந்த செயினை  பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளனர்.

இதனை அடுத்து சதீஷ்குமார் மற்றும் அபி நேற்று வியாசர்பாடி காவல் நிலையத்திற்க்கு வந்து நான்கரை சவரன் தாலி செயினை பெற்றுக் கொண்டனர். பின்னர் ஆட்டோ ஓட்டுனருக்கு நன்றி கூறி சென்றனர்.