திமுகவின் சரிவு-அமைச்சர் நாசர் கல்வீசிய செயல்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளாசல்

திமுகவின் சரிவு, பால்வளத்துறை அமைச்சர் எஸ்எம் நாசர், திமுக தொண்டர் மீது கல்வீசிய செயல் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சாடியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக பால்வளத்துறை அமைச்சர் எஸ்எம் நாசர் நேற்று சென்றிருந்தார்.

அப்போது அவர் அமர்வதற்கு திமுக தொண்டர் ஒருவரை போய் சேர் எடுத்துட்டுவா என்றார். அந்த தொண்டர் நாற்காலி கொண்டுவருவதற்கு தாமதமானது.

இதனால் எரிச்சல் அடைந்த அமைச்சர் நாசர், தரையில் கிடந்த கல்லை எடுத்து, அந்தத் தொண்டர் மீது வீசியடித்தார். அரசு உயர் அதிகாரிகள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் அமைச்சர் நாசர் தொண்டர் மீது கல்வீசியது அதிர்ச்சிக்குரியதாக இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பால்வளத்துறை அமைச்சர் எஸ்எம் நாசர் சர்ச்சையில் சிக்குவது 2வது முறையாகும். மத்திய அரசு பாலுக்கு ஜிஎஸ்டி வரி வித்துள்ளது எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசில் அமைச்சர்கள் பொதுவெளியில் இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொள்வது 4வது சம்பவமாகும். இதற்கு முன் போக்குவரத்து அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், அரசு ஊழியரை அவமதிப்பு செய்தமைக்காக, அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார்.

வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஒரு பெண்ணை தாக்கிய வீடியோ வெளியானது. சமீபத்தில் நகராட்சிநிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு, ஒரு நிகழ்ச்சியில் தொண்டர் ஒருவரை கன்னத்தில் அறைந்த காட்சியும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

திமுக அமைச்சர் நாசர் நடந்து கொண்டமைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “இந்திய வரலாற்றில் ஒரு அமைச்சர் மக்கள் மீது கல்வீசியதைப் பார்த்திருக்கிறீர்களா. திமுக அமைச்சர் ஆவடி நாசர் செயலை அறிவாலயம் பார்க்கட்டும்.

விரக்தியில் மக்கள் மீது கல்வீசினார் அமைச்சர் நாசர். நாகரீகம் இல்லாமல், மரியாதை இல்லாமல் மக்களை அடிமைகள் போல் நடத்துகிறார்கள்.”எனத் தெரிவித்திருந்தார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டீட்டை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ட்விட்டரில் விளாசியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “அமைச்சர் நாசரின் செயல் திமுகவின் சரிவு. அதன் லட்சிய வேர்களில் இருந்து, இன்று வாரிசு அரசியல் வரை இதுபோன்ற அசிங்கமான, கோமாளித்தனமான செயல்கள் வெளிப்படையாகத் தெரிகிறது. இதன் விளைவுகள் தவிர்க்க முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.