ஐபிஎல் தொடரிலிருந்தும் இந்த சீசனோடு ஓய்வு பெறுகிறாரா தோனி?

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்து வரும் 14-வது ஐபிஎல் சீசனோடு தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனோடு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று பல்வேறு ஊகச் செய்திகள் வந்த போதிலும் அதை சிஎஸ்கே நிர்வாகிகளும், உரிமையாளர்களும் மறுத்து வருகிறார்கள். ஆனால், வதந்திகள் அடங்குவதாக இல்லை. தோனியின் உடல்கட்டுக்கோப்பு, இளைஞர்களுக்கு இணையாக களத்தில் விளையாடுதல் போன்றவற்றால் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்று சிஎஸ்கே தரப்பு கூறுகிறது. சிஎஸ்கே அணிக்கு கேப்டனாகவும், பொதுவாகவே தலைமைப் பண்பு அதிகமாக இருப்பவராக தோனி இருப்பதால், சிஎஸ்கே அணியிலிருந்து தோனியை எளிதாகப் பிரிக்க இயலாது.

கடந்த தோனி தலைமையில் சிஎஸ்கே அணிக்கு மோசமாக இருந்தது. ஆனால், இந்த சீசனில் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து சிஎஸ்கே அணி மீண்டெழுந்து விளையாடி வருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் தோனி இந்த சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் எனக் கணிப்பதாகத் தெரிவித்துள்ளார். பிராட் ஹாக் கூறுகையில் “சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தான் கேப்டனாகவும், வீரராகவும் கடைசி சீசனாக இருக்கும் என நம்புகிறேன்.

தோனி தனது பேட்டிங் திறமையை இழந்துவிட்டார் என்ற காரணத்தினால் கூட சிஎஸ்கே அணியிலிருந்து அவர் ஒதுங்கிவிடலாம். 2022ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் நடக்க உள்ளது அந்த ஏலத்தில் தோனியை அணியிலிருந்து கழற்றிவிட்டால் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கும். அதன்பின் அவரை வேறு வகையில் சிஎஸ்கே அணி பயன்படுத்தும்.

ஆதலால், இந்த ஆண்டு சீசன் முடிந்த பின் தோனி ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கலாம். தோனியின் பேட்டிங் செய்யும் விதத்துக்கும், கால் நகர்த்தும் விதத்துக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது, வருண் பந்துவீச்சில் தோனி ஆட்டமிழந்த விதம் அவர் பேட்டிங்கில் ஃபார்மை இழந்துவிட்டதாகவே கருதுகிறேன். 40 வயதுக்கான தளர்வு தோனிக்கு வந்துவிட்டது.

இந்திய கிரிக்கெட், சிஎஸ்கே அணி வளர்ச்சிக்கு தோனியின் தலைமைப் பண்பு மிகவும் நல்லது. ரவிந்திர ஜடேஜா அணியில் வளர்வதற்கும், இளம் வீரர்களை மேம்படுத்துவதற்கும் தோனி உதவி செய்கிறார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கக் கூடியது. தோனிக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பதவி சிஎஸ்கே அணியில் அவர் நிர்வாக ரீதியான பதவிக்கு வரவேற்கும் அல்லது சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணிக்கு கூட உயர்த்தும்.

இவ்வாறு பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.