தமிழ் நடிகர்களிலேயே முதன்முறை! – தனுஷ் படைத்த புது சாதனை

‘தி க்ரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தனுஷ் இந்தியா திரும்பியுள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.

இந்நிலையில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணிசமானோர் தனுஷை பின் தொடர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் 28 லட்சத்துக்கும் அதிகமானோர் தனுஷை பின் தொடர்கின்றனர். அந்த வகையில் தற்போது ட்விட்டரில் தனுஷை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. ஒரு தமிழ் நடிகர் ட்விட்டரில் 1 கோடி ஃபாலோயர்களை தொடுவது இதுவே முதல் முறை.

இந்திய அளவில் நடிகர் சல்மான் கான் 4 கோடி ஃபாலோயர்களை பெற்று முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் தனுஷின் இந்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.