எங்களுக்கு வாக்கு வங்கி அல்ல, மேம்பாடு, வளர்ச்சிதான் முக்கியம்: பிரதமர் மோடி பேச்சு

கர்நாடகத்தில் இதற்கு முன் இருந்த அரசுகள், மக்களின் அடிப்படைத் தேவைகளில் அக்கறை செலுத்தாமல் வாக்கு வங்கியில் குறியாக இருந்தன.

ஆனால், பாஜகவைப் பொறுத்தவரை வாக்குவங்கி முக்கியமல்ல, வளர்ச்சியும், மேம்பாடும்தான் பிரதானம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தில் கொடேகல் மாவட்டத்தில் ரூ.10,800 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆளுநர் தவார்சந்த் கெலாட், மத்திய அமைச்சர்கள் பகவந்த் குபா, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

அடுத்த 25 ஆண்டு காலம் நமக்கு அமிர்த காலம். நல்ல செயல்கள், வளர்ச்சித் திட்டங்கள் செய்ய ஏதுவான காலம். இந்தக் காலத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும். வயல்களில் நல்ல விளைச்சல் மட்டுமின்றி, தொழிற்துறையும் மேம்பட வேண்டும்.

கர்நாடகத்தில் இதற்கு முன் ஆண்ட கட்சிகள், மக்களுக்காகப் பணியாற்றவும், சாலை அமைக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்குப் பதிலாக, வாக்கு வங்கி அரசியலில்தான் கவனம் செலுத்தின.

அனைத்து திட்டங்களையும் வாக்குவங்கியோடு தொடர்புபடுத்தினார்கள். ஆனால், எங்களுக்கு வாக்கு வங்கியைவிட மேம்பாடு, வளர்ச்சிதான் முக்கியம்.

ஜல்ஜீவன் திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதற்கு முன் 18 கோடி கிராமப்புறவீடுகளில் 3 கோடி வீடுகளுக்கு குழாய்மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது ஆனால், கடந்த 3 ஆண்டுகளில் அதை 11 கோடியாக உயர்த்தியுள்ளோம்.

கடந்த காலங்களில் ஆண்ட அரசுகள், பின்தங்கிய மாவட்டங்கள் என்று கூறியவற்றில் எல்லாம் நாங்கள் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் கொண்டு வந்துள்ளோம்.

எங்கள் முன்னுரிமை வாக்குவங்கி அரசியல் அல்ல, மக்களின் வளர்ச்சியும், மேம்பாடும்தான். கர்நாடகத்தில் இரட்டை எஞ்சின் அரசு இயங்குகிறது. மாநில அரசு ஒருபக்கும், அதை வலுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசும் இணைந்து திட்டங்களை மக்களுக்காக வகுக்கிறது

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.