76 சிறுவர்களை மீட்ட பெண் காவலர்

டெல்லியில், மாயமான 76 குழந்தைகளை, பெண் காவலர் மீட்டுள்ளார். இதனால் அவரை, காவல்துறை மட்டுமின்றி பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.

டெல்லி சமயபூர் பத்லி காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர், சீமா தாகா. டெல்லியில் அதிகளவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாயமாகியுள்ளன. இது தொடர்பான வழக்குகள் காவல் நிலையங்களுக்கு அதிகளவில் வருகின்றன. இதையொட்டி போலீசார், வழக்குப்பதிவு செய்து குழந்தைகள் கடத்தப்பட்டார்களா, குடும்ப பிரச்சனையில் வீட்டை விட்டு வெளியேறினார்களா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தலைமை காவலர் சீமா தாகா, பல்வேறு சம்பவங்களில் மாயமான சிறுவர்களை, பத்திரமாக மீட்டுள்ளார். இது வரை அவர், 76 சிறுவர்களை மீட்டுள்ளார். அதில், 56 பேர் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், மேற்கு வங்கம் உள்பட மற்ற மாநிலங்களில் இருந்து குழந்தைகளை மீட்டு வந்துள்ளார். குறிப்பாக 76 குழந்தைகளை 3 மாதத்தில் மீட்டுள்ளார். இதனால் அவருக்கு உதவி ஆய்வாளர் பதவி உயர்வு கிடைத்தது. சுமார் 20 வயது முதல் காவல்துறையில் பணிபுரியும் சீமா தாகா, அவரது கல்லூரியில் இருந்து தேர்வாகி, நேர்காணல் மூலம் காவல்துறையில் பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீமா தாகாவின் கணவரும் காவல்துறை அதிகாரியாக உள்ளார். தற்போது சீமா தாகாவின் சாதனை பற்றிய புதிய வெப் தொடர் உருவாகி வருகிறது. இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வெப் தொடருக்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.