கண்டிப்பா கட்சியை சரி பண்ணிறலாம்.. தைரியமாக இருங்க… சசிகலா பேசிய ஆடியோவால் பரபரப்பு

சசிகலா

கண்டிப்பா கட்சியை சரி பண்ணிறலாம். எல்லோரும் தைரியமாக இருங்க என்று தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோவால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அவர் திடீரென அறிவித்தார். இதனால் சசிகலாவின் ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர். அதே  சமயம் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி கண்டு ஆட்சியை இழந்தது.

அதிமுக

இந்நிலையில், சசிகலா தொண்டர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த ஆடியோவில், ஒன்னும் கவலைப்படாதீங்க. கண்டிப்பா கட்சியை சரி பண்ணிறலாம். எல்லோரும் தைரியமாக இருங்க… இந்த கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன். கவலைப்படாதீங்க. கொரோனா நேரம், எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்க, நிலைமை மோசமாக இருக்கு. நிச்சயம் வந்திருவேன் என்று பேசியிருப்பது தெளிவாக கேட்கிறது.

ஆடியோ

சசிகலா பேசியதாக வெளியான இந்த ஆடியோ தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சசிகலா மீண்டும் தமிழக அரசியல் களத்திற்கு வருவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபட தொடங்கியுள்ளது.