தமிழக மீனவர்கள் கொலை: இலங்கை கடற்படையினர் மீது அமைச்சர் ஜெய்சங்கர் பாய்ச்சல்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்


தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கொன்ற செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள், இலங்கை கடற்படையினர் சமீபத்தில் தமிழக மீனவர்கள் 4 பேரை கொன்றது தொடர்பாக கேள்விநேரத்துக்கு பிந்தைய நேரத்தில் எழுப்பினர்.
திமுக எம்.பி.திருச்சி சிவா பேசுகையில் “இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 4 பேர் சமீபத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்கள். இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள்.


இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தவிர்க்கவிரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”எனத் தெரிவித்தார்
அஇஅதிமுக எம்.பி. எம். தம்பித்துரையும், தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனனம் தெரிவித்தார்.

அவர் பேசுகையில் “ இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 245 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொன்றுள்ளனர். இதற்கு முன் தமிழக மீனவர்களை கைது செய்து வந்த இலங்கை கடற்படையினர் கொலை செய்வது கண்டனத்துக்குரியது.


இந்த கொலைச் சம்வங்களை பிரதமர் மோடி கண்டிப்பதுடன், தேவையான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எடுக்கவ ேவண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.


அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எழுந்து பேசுகையில் “ தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசிடம் கடுமையான கண்டனத்தை இந்தியா பதிவு செய்துள்ளது. அதிலும் இந்த குறிப்பிட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத செயல், இலங்கை அரசிடம் இது தொடர்பாக மிக,மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.