ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக தத்தாத்ரேயா தேர்வு

தத்ராயே ஹொசபலே

ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதிய பொதுச் செயலாலராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தத்தாத்ரேயா ஹொசபலே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

இதன் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக பொதுச் செயலாளராக இருந்து வந்த 73-வயது பையாஜி ஜோஷிக்கு பதிலாக இனி தத்தாத்ரேயா ஹொசபலே பொதுச் செயலாளராகச் செயல்படுவார்.


பெங்களூரு கடந்த 2 நாட்களாக நடந்த உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அகில பாரதிய பிரிதிநிதி சபா (ஏபிபிஎஸ்) கூட்டத்தில் தத்தாத்ரேயா ஹொசபல்லேவை புதிய பொதுச் செயலாளராக நியமித்து முடிவு எடுக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம், ஷிவமோகா மாவட்டத்தில் கடந்த 1954ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் குடும்பத்தில் பிறந்தவர் தத்தாத்ரேயா ஹொசபலே. கடந்த 1968-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) ஹொசபலே சேர்ந்தார்.

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பட்டம் படித்தவர் ஹொசபலே. கடந்த 1978-ம் ஆண்டு ஏபிவிபி அமைப்பின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தத்தாரேயா, 15 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார்.

காங்கிரஸ் அரசு கொண்டு வந்த அவசர காலத்தில், ஹொசபல்லே மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அசாம் மாநிலம், குவஹாட்டியில் இளைஞர் மேம்பாட்டு மையத்தை அமைத்த பெருமை ஹொசபலேவைச் சேரும். அதன் பின் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணைச் செயலாளராக ஹொசபல்லே நியமிக்கப்பட்டார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் மூத்த உறுப்பினர், அனுபவம் மிக்கவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் நல்ல உறவை பராமரிப்பவர், பல்வேறு விஷயங்களை திறம்படக் கையாளும் தலைமை படைத்தவர் என்பதால், ஹொசபல்லே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.