விசாரணை கைதி கொலை; உதவி கமிஷனர்-இன்ஸ்பெக்டர் மாற்றம்..!

விசாரணை கைதி கொல்லப்பட்ட வழக்கில், உதவி கமிஷனர் இன்ஸ்பெக்டர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

 தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் கடந்த ஏப்ரல் 18ம் தேதி இரவு  திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், அவரது நண்பர் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (25) ஆகியோரை கத்தி, கஞ்சா வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதில், மறுநாளான 19ம் தேதி காலை விக்னேஷ் மர்மமான முறையில் மரணமடைந்தார்.

இது குறித்து தலைமைச் செயலக காலனி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் விக்னேஷை போலீசார் அடித்தே கொன்று விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதால், அப் பிரிவு தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

இதில் விக்னேஷ் உடலில் 13 இடங்களில் கொடுங்காயம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்ததால் விக்னேஷ் வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பாக கடந்த 7-ஆம் தேதி தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய எழுத்தார் முனாஃப், காவலர் பவுன்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஆயுதப்படைக் காவலர்கள் ஜெகஜீவன்ராம், சந்திரகுமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் கவனக்குறைவாகவும்,அஜாக்கிரதையாகவும் காவல்துறை அதிகாரிகள் இருந்ததாக புகார் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரை தென் மண்டலத்துக்கும், அயனாவரம் உதவி ஆணையர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் சனிக்கிழமை உத்தரவிட்டார்.